‘உன்னோட பேர் என்ன?’ என்று நம் வாழ்வில் ஆரம்பிக்கும் கேள்வி ‘+2 மார்க் என்ன?’, ‘சம்பளம் எவ்வளவு?’, ‘கல்யாணம் ஆயிடுச்சா?’, ‘எத்தனை குழந்தைகள்?’ என்று நீண்டுகொண்டே போகும். இருந்தாலும் பொதுத் தேர்வுகளுக்குப் பிறகு, நாம் மிகவும் பயப்படும் கேள்விகள் நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளாகத்தான் இருக்கும்.
கேம்பஸ் இன்டர்வியூவில் அதிகம் கேட்கப்படும் கேள்விகள் என்று பல காலங்களாகச் சொல்லப்படும் கேள்விகளுக்கு நாம் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா…
உங்கள் பலவீனம் என்ன?
எனக்குத் தெரிந்து என்னிடம் பலவீனங்களை விட பலமே அதிகம். ஒருவேளை ஏதாவது பலவீனத்தை என்னிடம் நீங்கள் கண்டால் அதைத் திருத்திக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறேன்… இருப்பேன்.
நான் ஏன் உங்களுக்கு இந்த வேலையைத் தரவேண்டும்?
வேலையின் தன்மையைப் (Job description) பொறுத்து இந்தக் கேள்விக்கு பதில் கூறவேண்டும். நீங்கள் நேர்காணல் சென்றிருக்கும் வேலைக்கு என்ன திறன் (skill) தேவையோ, அதை வைத்து நீங்கள் பதிலளிக்கலாம்.
உதாரணமாக, மார்க்கெட்டிங் வேலைக்கான நேர்காணலுக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த வேலைக்கு தொடர்பு திறன் (Communication skill) மிக மிக அவசியம். அதனால் ‘நான் அனைவரிடமும் எளிதாக உரையாடுவேன். பிறர் பேசுவதை நன்றாக கவனித்து, அதற்கு பதில் கூறுவேன் அல்லது செயலாற்றுவேன்’ என்று நீங்கள் பதிலளிக்கலாம்.
என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தக் கேள்விக்கு எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும்… அவ்வளவு சம்பளம் வேண்டும் என்று பதிலளிக்காதீர்கள். இந்த வேலைக்குத் தேவையான அனைத்து திறன்களும் என்னிடம் உள்ளன. என்னால் வேலையில் நன்றாகச் செயல்பட முடியும். அதனால் என்னுடைய திறனை பொறுத்து எனக்கு சம்பளம் கொடுங்கள் என்று கூறலாம்.
எங்கள் கம்பெனிக்கு என்ன செய்வீர்கள்?
இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. நீங்கள் கொடுக்கும் டார்கெட்டை எப்போதும் அடைந்துவிடுவேன் என்று கூறுவதை விட, என்னுடைய கரியரில் நான் வளர்ச்சி அடைவதுபோல, கம்பெனியும் வளர்ச்சி அடைய வேலை செய்வேன் என்று கூறி அசத்துங்கள்!
இந்த மாதிரி நேர்காணலில் நீங்கள் சந்தித்த கேள்வி என்ன மக்களே?