ஜ.நா உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

அவசர பதிலளிப்பு வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம் மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு  (09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் தொடர்பிலான பாராளுமன்ற உப அமைச்சர் கொமுரா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோருடன் ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்றத்தின் உப அமைச்சர் கொமுரா மசாஹிரோ பொருளாதார நெருக்கடிகளின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். நீண்டகால நட்பு நாடு என்ற வகையில் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஜப்பான் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.

அதற்கமைய நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொள்ளக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை (ERP) அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், பாடசாலை உணவு வழங்கல் திட்டம் (SMP) மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்ற வகையில் விசேட வேலைத்திட்டங்களாக முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

70 வருடங்களுக்கு முன்பாக இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு ஜப்பான் வழங்கிவரும் 10 மில்லியன் பெறுமதியான உணவு பொருட்கள் அன்பளிப்பு இம்முறையும் வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொள்ளக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை மட்டுப்படுத்துவதற்கான (ERP) திட்டத்தின் கீழ் (145,000) பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் சமரதுங்க சுட்டிக்காட்டினார்.

இதுவரையில் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கை மக்களுக்காக 7270 மெற்றிக் டொன் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் பாடசாலைகளுக்காக சிவப்பு பருப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, (960,000) பாடசாலை மாணவர்கள் அதனால் பயனடைவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.