Rohit sharma Record: ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனை மழை..! சிக்ஸ் டூ ஆயிரம் ரன்கள்

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை லீக் போட்டி டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரரானார்.  சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்தவர், உலக கோப்பையில் அதிக சதம் அடித்த இந்தியர், உலக கோப்பையில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை அடித்தவர் என்று அடுத்தடுத்து சாதனைகளையெல்லாம் வரிசையாக படைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட்டான கேப்டன் ரோகித் சர்மா, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் நிதானமான ஆட்டம்

இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் குருபாஸ் 21 ரன்களுக்கும், இப்ராஹிம் ஜத்ரான் 22 ரன்களுக்கும் அவுட்டாக, அடுத்து வந்த ரஹ்மத் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி ஒருகட்டத்தில் 63 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. இதனால் பெரிய ஸ்கோர் எடுக்குமா? ஆப்கானிஸ்தான் என்ற சந்தேகம் எழுந்தபோது, அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாஹிதி 80 ரன்களும், அஸ்மத்துல்லா 62 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். பேட்டிங் பிட்ச் என்பதால் பெரிய அளவில் பந்து சுழலவில்லை. 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. 

ரோகித் சர்மா – இஷான் கிஷன் அதிரடி ஆட்டம்

இது ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் என்றாலும், இந்திய அணி இருக்கும் பேட்டிங் பட்டாளத்துக்கு ஏற்ற ஸ்கோர் அல்ல என்றே தோன்றியது. அதற்கேற்பவே இந்திய அணியின் பேட்டிங்கும் அதிரடியாக இருந்தது.

October 11, 2023

ஓப்பனிங் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சிக்சர்களுக்கும் பவுண்டரிக்கும் பந்துகளை பறக்கவிட்ட அவர், 30 பந்துகளில் அரைசதமும்  52 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்தார். இதன்மூலம் உலக கோப்பையில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் ரோகித் சர்மா பெற்றார்.

ஹிட்மேன் ரோகித் சர்மாவின் மகத்தான சாதனை

October 11, 2023

அதாவது சச்சினின் சாதனையை முறியடித்தார். அதேபோல், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் வந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 553 சிக்சர்கள் அடித்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். அதனை இப்போது ரோகித் சர்மா முறியடித்திருக்கிறார். மேலும், உலக கோப்பையில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற சாதனையும் ரோகித் சர்மாவிடம் வந்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 மெகா சிக்சர்களும் அடங்கும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.