மதுரை: ராஜபாளையத்தில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக வியாபாரி ஒருவர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் குழு விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையத்தை சேர்ந்த முத்துப்பழம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ராஜபாளையம் இந்து நாடார் உறவின்முறை சங்க உறுப்பினராக உள்ளேன். காமராஜ் நகரில் சங்கத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகளில் 25 ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகிறேன். இந்த கடைகள் பழுதடைந்தால் பராமரிப்பு பணிக்காக உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வணிக வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உறவின் முறை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்தினேன்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் அனுமதியில்லாமல் தண்ணீர் எடுத்து பயன்படுத்தியதாக உறவின் முறை தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும், ரூ.15 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டனர். அனுமதி பெற்று தண்ணீர் எடுத்தாலும் நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் உறவின் முறை நிர்வாகி ரவிநாடார் என்பவர் தனிப்பட்ட விரோதத்தை முன்வைத்து கடைகளை காலி செய்ய வைக்கும் நோக்கத்தில் கடைகளுக்கு பூட்டு பேட்டனர். 28.7.2022-ல் ஊர் கூடம் போட்டு, நிர்வாகிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, அபராதம் செலுத்தினால் மட்டுமே கடைகளின் சாவி தருவோம் என்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன்.
இதனால் என்னை உறவினர் முறையில் இருந்து நீக்கியிருப்பதாகவும், ரூ.5 லட்சம் கட்டினால் தான் மீண்டும் உறவின் முறையில் சேர்ப்போம் தெரிவித்தனர். பின்னர் என்னையும், என் குடும்பத்தினரையும் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. எங்களுடன் பேசினால் ஊரை விட்டு விலக்குவதாக உறவினர்களையும் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், நான் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் உறவின் முறை நிர்வாகிகள் என் கடைக்குள் அத்துமீறி நுழைந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வெளியே வீசினர். என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கடைளை திறந்து அமைதியாக தொழில் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரின் புகார் தொடர்பாக 20 நபர்கள் அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரரை ஊரை விட்டு விலக்கி வைக்கவில்லை என்றார். இதையடுத்து நீதிபதி, தண்ணீர் எடுத்த குற்றச்சாட்டுக்காக ஒருவரை ஊரை விட்டு விலக்கி வைப்பது, சமூகப் புறக்கணிப்பு செய்வதை ஜீரணிக்க முடியாத கொடுஞ்செயலாகும். இந்த செயலை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
தண்ணீர் எடுத்தார் என்பதற்காக ரூ.15 ஆயிரம் அபராதம் எப்படி விதித்தார்கள்? இவ்வாறு அபராதம் விதிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை. சந்திரயான் காலத்தில் பஞ்சாயத்து கூட்டி அபராதம் விதித்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எனவே, உண்மையில் மனுதாரர் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டாரா என்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், ஏஎஸ்பி ஆகியோர் அடங்கிய குழு அமைத்து விசாரணை நடத்தி அக். 31க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.