மணிப்பூர் நீதிபதியை மாற்ற கொலீஜியம் மீண்டும் பரிந்துரை| Collegium again recommends transfer of Manipur judge

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரனை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் பரிந்துரையை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் வலியுறுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்டி சமூகத்தினர், தங்களை பட்டியலின பழங்குடியினராக அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன், கடந்த மார்ச், 27ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், இந்தக் கோரிக்கையை, நான்கு வாரங்களுக்குள் உரிய முறையில் பரிசீலித்து, மத்திய அரசுக்கு அனுப்பும்படி கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மெய்டி மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த, மே 3ம் தேதி துவங்கிய வன்முறையால், மணிப்பூரில் தற்போதும் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், நீதிபதி முரளிதரனை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், 9ம் தேதி பரிந்துரை செய்திருந்தது.இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் அல்லது தொடர்ந்து மணிப்பூரில் பணியாற்ற அனுமதிக்கும்படி, நீதிபதி முரளிதரன் கோரிக்கை அனுப்பியிருந்தார்.

இதை கொலீஜியம் ஆய்வு செய்தது. ‘நீதித் துறை சிறப்பான நிர்வாகத்தை மனதில் வைத்து, நீதிபதி முரளிதரன் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவரை கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் பரிந்துரை வலியுறுத்தப்படுகிறது’ என, கொலீஜியம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.