தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை| 3,000 cubic feet water regulatory committee recommendation for Tamil Nadu

வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில், வினாடிக்கு 3,000 கன அடி வீதம், காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் கடந்த மாதம் 29ல் கூடியது. அக்கூட்டத்தின் முடிவில், 3,000 கன அடி நீரை, தமிழகத்துக்கு திறந்துவிடும்படி உத்தரவிடப்பட்டது.

ஆனாலும், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக, கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பெரும் போராட்டத்தில் இறங்கின.

இதனால், மிககுறைந்த நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டது. இதற்கும் அம்மாநில விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே, தஞ்சை டெல்டா பகுதிகளில் பயிர்களுக்கு நீர் திறந்துவிட வேண்டிய அவசியம் இருப்பதால், தமிழக சட்ட சபை நேற்று முன்தினம் கூடி, காவிரியில் உரிய நீரை திறந்துவிடும்படி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் திட்டமிட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே நேற்று நடந்தது.

‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இந்த கூட்டத்திற்கு, குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமை வகித்தார்.

தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மழை பொழிவு மற்றும் அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்ட அனைத்து புள்ளி விபரங்களையும் அலசி ஆராய்ந்து, இறுதியாக, 3,000 கன அடி நீரை, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டுமென ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.

இந்த நீரை, வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில், தமிழக – கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவில் திறந்துவிட அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை ஏற்று, காவிரி ஆணையம், அதிகாரப்பூர்வமாக உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

– நமது டில்லி நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.