Shubman Gill: ’வா… பாத்துக்கலாம்’ பிசிசிஐ மெசேஜூக்கு பிறகு அகமதாபாத் பறந்த கில்

இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மான் கில், உலக கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. மிகப் பெரிய கனவுடன் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட இருந்த சுப்மான் கில்லுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு சென்ற அவர், காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ரத்தத்தில் பிளேட்லெட் செல்களின் எண்ணிக்கை குறைவானதால் உடனடியாக தீவிர கண்காணிப்பிலும் சுப்மான் கில் இருந்தார். இதனால் படிப்படியாக டெங்கு காய்ச்சல் தொற்றில் இருந்து குணமடைந்தார். 

இதனையடுத்து அவர் இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை மேட்ச் நடைபெறும் அகமதாபாதுக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அவருடன் பிசிசிஐ மருத்துவக் குழுவும் சென்றது. அங்கும் அவர் மருத்துவ கண்காணிப்பிலேயே இருப்பார் என கூறப்படுகிறது. ஒருவேளை முழுமையாக குணமடைந்து முழு உடல் தகுதியை எட்டும் பட்சத்தில் சுப்மான் கில் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இப்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே கூறப்படுகிறது. இன்னும் சில நாட்கள் சுப்மான் கில் மருத்துவ ஓய்வில் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக ரிசர்வ் பிளேயராக ருதுராஜ் கெய்க்வாட் அல்லது யாஷஸ்வி ஜெய்வால் ஆகியோரில் யாரேனும் ஒருவரை அணிக்கு அழைக்கலாமா? என்ற பரிசீலனையும் இந்திய அணி நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது.

ஒருவேளை அவர்களை அணியில் சேர்க்கும்பட்சத்தில் சுப்மான் கில்லை முழுமையாக உலக கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த விஷயத்தில் இன்னும் முழு முடிவும் எட்டப்படவில்லை. இந்திய அணி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, சுப்மான் கில் பிற்பகுதி உலக கோப்பை ஆட்டங்களில் ஆடுவதற்காவது தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. அதற்காகவே அவரை அணியுடன் வைத்திருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. முழுமையாக உலக கோப்பை அணியில் இருந்து நீக்கும் எண்ணம் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இல்லை. முடிந்தளவுக்கு அவரை இந்த உலக கோப்பை தொடரில் ஆட வைக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணம். இருப்பினும் அதற்கு சுப்மான் கில்லின் உடல் நிலை ஒத்துழைக்குமா? என்பது தான் இப்போதைக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வி.

October 11, 2023

அகமதாபாத்தில் தங்கும் சுப்மான் கில்லை பிசிசிஐ மருத்துவ குழு முழுமையாக கண்காணித்து, அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் இனி வரும் உலக கோப்பை ஆட்டங்களில் சுப்மான் கில் ஆடுவாரா? இல்லையா? என்பது தெரியவரும். இது குறித்து சுப்மான் கில்லிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கும் பதில் கொடுக்கவில்லை. இப்போதைக்கு இந்திய அணி உலக கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இப்போட்டியை ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.