ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். தெலங்கானாவில் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்திவரும் ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போகிறார் என்ற பேச்சு சமீபத்தில் திடீரென்று எழுந்தது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் கே.சி.வேணுகோபாலையும் டெல்லியில் சந்தித்தார் ஷர்மிளா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியை ஆரம்பித்ததிலிருந்து தெலங்கானா மக்களின் பிரச்னைகளுக்காகப் பணியாற்றிவருகிறேன். தற்போது, தெலங்கானா அரசியல் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர்களைச் சந்திக்க வந்தேன்’ என்றார்.
ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. தெலங்கானாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக தற்போது அவர் அறிவித்திருக்கிறார். ‘தெலங்கானாவில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடக்கூடாது என்பதற்காக, காங்கிரஸுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தேன்.

காங்கிரஸின் பதிலுக்காக நான்கு மாதங்கள் காத்திருந்தேன். காங்கிரஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, என்னுடைய கட்சியை காங்கிரஸுடன் இணைக்கவில்லை. தெலங்கானாவில் வரும் நவம்பர் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்’ என்றார் ஷர்மிளா.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகனான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார். தெலங்கானா மாநில அரசியல் இறங்க முடிவெடுத்த அவருடைய தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, 2021-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியைத் தொடங்கினார். தெலங்கானா மாநிலம் முழுவதும் தங்கள் கட்சிக்கு ஆதரவாளர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.

தனியாக இயங்குவதைவிட, தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் செயல்பட்டால் அரசியலில் வளர்ச்சியடையலாம் என்று கணக்குப் போட்டார் ஷர்மிளா. எனவே, அதற்கான முயற்சியில் இறங்கிய அவர், டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார். கட்சி இணைப்பு தொடர்பாக காங்கிரஸ் தனது முடிவைத் தெரிவிக்க செப்டம்பர் 30-ம் தேதிவரை காத்திருப்பது என்று அவர் முடிவெடுத்திருந்தார். ஆனால், காங்கிரஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இந்த நிலையில், ‘இன்னும் சில நாட்கள் காத்திருக்குமாறு காங்கிரஸ் தலைமையிடமிருந்து ஷர்மிளாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து, சில நாட்கள் காத்திருந்த அவருக்கு பதில் எதுவும் கிடைக்காததால், இனிமேல் காத்திருந்து பலனில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால்தான், அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் தெலங்கானாவின் பல பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸுக்குள் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸின் தெலங்கானா மாநில நிர்வாகிகள் விரும்பினர். ஷர்மிளாவை காங்கிரஸுக்குள் கொண்டுவந்துவிட்டால், ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் காங்கிரஸுக்குள் வந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அவர்களின் விருப்பம் நிறைவேறவில்லை.
மாநிலம் முழுவதும் தன் கட்சியை நிறுவுவதற்கான முயற்சியாக 3,800 கி.மீ நடைப்பயணத்தை ஷர்மிளா மேற்கொண்டார். அதன் மூலம், தெலங்கானா அரசியலில் முக்கிய சக்தியாக மாறிவிடலாம் என்று நினைத்தார். மேலும், முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அவருடைய மகன் கே.டி.ராமராவ் ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து விளம்பர வெளிச்சத்தைத் தேடவும் அவர் முயன்றார். அதிரடியாக சில போராட்டங்களிலும் ஈடுபட்டார். ஆனாலும், அரசியலில் அவரால் பெரிய அளவுக்கு செல்வாக்கைப் பெற முடியவில்லை.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை என்பன மட்டுமே அவருடைய அடையாளங்களாக இருக்கின்றன. அந்த அடையாளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மக்கள் செல்வாக்கை அவரால் பெற முடியவில்லை. அதனால்தான், அவரை கட்சியில் சேர்க்க காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லையா என்பது தெரியவில்லை. முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எதிராக மட்டுமே அவர் அரசியல் செய்துவருகிறார். காங்கிரஸ் கட்சியையோ, பா.ஜ.க-வையோ அவர் விமர்சிக்கவில்லை. எனவே, இவரது வாக்குகளால் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்கு வேண்டுமானால் சிறிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.