திருவாரூர் அருகே மாங்குடி செல்லும் சாலை ஓரத்தில், இரு தினங்களுக்கு முன்னர் தலையில் பலத்த காயத்துடன் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக திருவாரூர் தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் திருமணம் மீறிய உறவு விவகாரத்தால் நந்து என்ற இளைஞரால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவருக்கு வயது 29. திருவாரூர் ஆவின் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த இவர், நாகை மாவட்டம் ஆந்தகுடி பகுதியில் வசித்து வந்த 40 வயதான மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் ஆறு மாத காலமாக திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராகுல், மீனாவின் வீட்டிற்கு வந்து செல்வது உறவுக்கார பையனான நந்துவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அடிக்கடி அப்பெண்ணிடம் நந்து, தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், அப்பெண்ணோ, `நான் ராகுலை இங்கு வர சொல்லவில்லை..! அவனாகத்தான் வீட்டிற்கு வருகிறான்’ என்றும், `அவனை கொலை செய்தால் மட்டுமே நிம்மதி’ என்று நந்துவை ராகுலை கொலை செய்ய சொல்லி மீனா தூண்டி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்து, இரு தினங்களுக்கு முன்னர் இரவு, மீனாவின் வீட்டிற்கு வந்து சென்ற ராகுலை தன்னுடைய கூட்டாளிகள் மூவருடன் பின் தொடர்ந்து சென்று, மாங்குடி என்ற பகுதியில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஒரு கட்டத்தில் நந்து, தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், கூட்டாளிகளுடன் சேர்ந்து ராகுலின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராகுல் பலியாக, இந்த கொலையை விபத்தாக மாற்ற முயற்சி செய்து அவருடைய இரு சக்கர வாகனத்தையும் அவரது உடலையும் சாலையோரத்தில் இழுத்துப் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
ராகுலின் உடலை கைப்பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில் திருமணம் மீறிய விவகாரத்தால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், தலைமறைவாக இருந்த, கொலையாளிகள் மீனா உட்பட 5 பேரை நேற்று திருவாரூர் தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் ஐந்து பேர் மீதும், கொலை வழக்கு உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக பேசிய திருவாரூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் சனல்குமார்… “ராகுல் என்ற இளைஞர், சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக நாகை மாவட்டம் ஆந்தகுடி பகுதியில் வசித்து வந்த மீனா என்ற பெண்ணுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி அவரின் வீட்டில் தனிமையில் சந்திப்பதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளனர். மீனாவின் உறவுக்கார நபர் நந்து. இருவரிடமும் தன்னுடைய பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி வீடு கட்டி சொகுசாக இருந்து வந்துள்ளார் மீனா.



மீனாவின், திருமணம் மீறிய உறவு விவகாரம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரின் கணவருக்கு தெரியாமலே இருந்துள்ளது. இந்நிலையில் ராகுலுடன் உறவில் இருப்பது நந்துவிற்கு பிடிக்காத காரணத்தினால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீனா, ராகுலை கொலை செய்ய சொல்லி தூண்டிவிட்டுள்ளார். மீனாவின் தூண்டுதலின் பேரில் நேற்று முன்தினம் இரவு, நந்து மற்றும் அவனுடைய கூட்டாளிகள் மூன்று பேர் சேர்ந்து மாங்குடி என்ற பகுதியில் வைத்து, ராகுலை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், இக்கொலையை விபத்தாக மாற்றவும் முயற்சி செய்துள்ளனர். தற்போது இந்த கொலைக்கு காரணமாக இருந்த மீனா உட்பட கொலையாளிகள் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.