உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான அக்சென்ச்சர் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வைத் தவிர்த்துள்ளது. மேலும் இந்தியா மற்றும் இலங்கையில் பணிபுரியும் ஊழியர்களின் உயர் பதவிக்கான புரொமோஷனை தவிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் விஜ் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில், “2023-ம் நிதியாண்டின் தொடக்கத்தில் நிறுவனம் எதிர்பார்த்ததை விட மிகவும் சவாலான மேக்ரோ என்விரோன்மெண்ட் (Macro Environment) சூழலை எதிர்கொண்டது. இதனால் நிறுவனம் மிகவும் கடினமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆகையால் சட்டப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்ட இடங்களைத் தவிர, 2023-ம் ஆண்டில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாது.
ஊழியர்களின் பர்ஃபார்மென்ஸ் அடிப்படையில் கொடுக்கப்படும் போனஸ்களும் கடந்த வருடத்தை விடக் குறைவாகவே இருக்கும்.
நிர்வாக இயக்குனர் போன்ற லெவல் 1 முதல் லெவல் 4 வரையான பதவி உயர்வுகளையுமே ஜூன் 2024 வரை ஒத்திவைக்க திட்டமிட்டு இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை அக்சென்ச்சர் கொண்டுள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வளர்ச்சி காலங்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிறுவனங்கள், கஷ்ட காலங்களில் கை வைப்பது ஊழியர்களின் தலையில் தான்.