காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் எச்சரிக்கை, காசா நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைப் போன்றது என்று உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் ஜசரேவிக் கூறியது: “இஸ்ரேல் ராணுவம் விதித்துள்ள 24 மணி நேர கெடுவுக்குள் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களை வெளியேற்றுவது என்பது இயலாத காரியம் என மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் காரணமாக பலத்த காயமடைந்துள்ள பலருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்டவர்களை வெளியேற்றுவது என்பது அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு இணையானது. அத்தகையவர்களை வெளியேற்ற சுகாதாரப் பணியாளர்களிடம் கேட்பது மிக மோசமான கொடுமை. லட்சக்கணக்கானோரை வெளியேறச் சொல்வது இயலாத காரியம். அது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் மட்டுமே மின்சாரம் உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். மருத்துவமனையின் முக்கியமான செயல்பாடுகளுக்கு ஜெனரேட்டர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர்” என்றும் ஜசரேவிக் கூறியுள்ளார்.
அத்துடன், “எரிபொருள், நீர், உணவு மற்றும் உயிர்காக்கும் பொருட்கள் ஆகியவற்றை காசா பகுதிக்கு அவசரமாக வழங்க முடியாவிட்டால், அது பேரழிவை ஏற்படுத்திவிடும்” என்றும் ஜசரேவிக் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், காசா நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பத்திரமாக வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கு ஏற்ப தனி வழியை உருவாக்குமாறு ஹமாஸ் அமைப்பினரை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த தனிப் பாதை மருத்துவப் பணியாளர்களும் நோயாளிகளும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கானதாக இருக்க வேண்டும் என்றும் அது வலியுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த உத்தரவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரி ஜோசப் போரெல், இது நடைமுறைக்கு கொஞ்சம்கூட ஏற்ற செயல் அல்ல என தெரிவித்துள்ளார். இதனிடையே, இஸ்ரேலின் இந்த எச்சரிக்கையை புறக்கணிக்குமாறு ஹமாஸ் பாலஸ்தீனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது போலிப் பரப்புரை என்றும், உளவியல் ரீதியிலான தாக்குதல் என்றும் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை 24 மணி நேரத்தில் வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததும், அதை ஹமாஸ் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து, உயிருக்கு பயந்து பாலஸ்தீனியர்கள் பலரும் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர்.