புதுடில்லி : கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ பரிசோதனை செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவுக்கு உத்தரவிட்டது.
புதுடில்லியை சேர்ந்த, 27 வயது திருமணமான பெண், தன் 26 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
ஆனால், வயிற்றில் வளரும் கரு, சிசுவாக வளர்ந்துவிட்டதால், கருக்கலைப்பு செய்வது சிசு கொலைக்கு சமமானது எனக்கூறிய அரசு தரப்பு, நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது.
இதை விசாரித்த இரு பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இருவேறு விதமான மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தனர். வழக்கு, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இரண்டு குழந்தைக்கு தாயான மனுதாரர், கடந்த ஆண்டு செப்., மாதம் இரண்டாவது குழந்தையை பிரசவித்துள்ளார்.
அதன் பின், பிரசவத்துக்கு பிறகான மனச்சோர்வு நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓராண்டாக அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற மன நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், அவரது கர்ப்பத்தை தொடர்வதில் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றுகள் உள்ளனவா என்பதை எய்ம்ஸ் மருத்துவ குழு இந்த நீதிமன்றத்துக்கு விளக்க வேண்டும்.
மனுதாரரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை முழுமையாக சோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், மனுதாரரின் வயிற்றில் வளரும் சிசுவின் உடல்நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவ குழு உடனே சோதனை செய்து, 16ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement