உலகக்கோப்பையின் அதிக எதிர்பார்ப்புமிக்க போட்டியான இந்தியா – பாகிஸ்தான் போட்டி அஹமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது அவர் பேசிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே…
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/10/FfGEw9saAAApsxM.jpg)
“அஹமதாபாத் மைதானம் ரொம்பவே பெரிதாக இருக்கிறது. நிறைய ரசிகர்கள் இங்கே கூட போகிறார்கள். இது எங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. சிறப்பாக ஆடி ஹீரோக்களாக மாற வேண்டும்.” என்றார்.
ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை இந்தியாவிற்கு எதிராக ஆடிய 7 போட்டிகளிலும் தோற்றிருக்கிறீர்களே எனும் கேள்விக்கு பாபர் அசாம், “கடந்த காலங்களில் நடந்தவற்றுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய தேவையில்லை. 2021க்கு முன்பாக டி20 உலகக்கோப்பைகளிலும் இந்தியாவை நாங்கள் வீழ்த்தியதில்லை. ஆனால், 2021-ல் அதை நிகழ்த்தியிருந்தோம். எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்று ஒன்று உண்டு” என நம்பிக்கையோடு பேசியிருந்தார் பாபர்.
பாகிஸ்தான் ரசிகர்கள் பலருக்கு விசா கிடைக்கவில்லையே எனும் கேள்விக்கு, “அஹமதாபாத் மைதானம் முழுவதும் நீல நிறத்தில் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். பாகிஸ்தான் ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டால் அவர்களின் ஆதரவு எங்களுக்கு ஊக்கத்தை தரும். ஆனால்,
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/FfFM9UbVUAApuBN.jpg)
நாங்கள் ஹைதராபாத்தில் முதல் முதலாக வந்திறங்கிய போது அங்கேயே எங்களுக்கு நிறைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதே விஷயத்தைத்தான் அஹமதாபாத்திலும் எதிர்பார்க்கிறேன்” என்றார். மேலும் பேசியவர்,
“இந்திய அணியின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அவர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் எடுக்க வேண்டும். இது இரண்டிலும்தான் அதிக கவனம் வைத்திருக்கிறோம். எது எப்படியோ நாங்கள் எங்களின் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியாக வேண்டும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Screenshot_2023_10_14_08_41_23_342_com_android_chrome.jpg)
இதுவரைக்கும் நான் பார்த்தவரையில் இந்த உலகக்கோப்பையில் டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மின்னொளியில் பிட்ச்கள் நன்றாகவே ஒத்துழைக்கின்றன. இங்கேயும் இரவு நேரத்தில் காற்றில் ஈரப்பதம் இருக்கும் என நினைக்கிறேன். அதை கட்டுபடுத்த நடுவர்கள் ஸ்ப்ரே பயன்படுத்துவார்களா என்பதை கேட்க வேண்டும். இந்த உலகக்கோப்பையில் இதுவரைக்குமே நான் எப்படி ஆட விரும்பினேனோ அப்படி ஆட முடியவில்லை. இந்தியாவிற்கு எதிராக நன்றாக ஆடுவேன் என நினைக்கிறேன். ஃபீல்டிங்கில் எங்கள் அணி அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை என்பது தெரியும். இந்தத் தொடரை வெல்ல வேண்டுமெனில் ஃபீல்டிங்கில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். அதனால்தான் ஒரு செஷன் முழுவதும் ஃபீல்டிங்கிற்கே முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி செய்தோம். ஃபீல்டிங் என்பது டெக்னிக் சார்ந்ததல்ல. உங்களின் அணுகுமுறையையும் குணாதிசயத்தையும் பொறுத்தது. உங்களின் குணத்தை வெளிக்காட்டி அணிக்காக ரன்களை சேமித்துக் கொடுங்கள் என்றுதான் வீரர்களிடம் சொல்லியிருக்கிறேன்!’ என்றார்.
இந்தியா Vs. பாகிஸ்தான் வெல்லப்போவது யார் என்பதை கமென்ட் செய்யுங்கள்!