Babar Azam: ’பழசை பார்க்காதீங்க.. ப்ளீஸ், என்னோட துருப்புச் சீட்டு இவர் தான்’ – பாபர் அசாம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் மோதல் இன்று நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் மோதலுக்கு தயாராகி களத்துக்கு வந்துள்ளன. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், பாகிஸ்தான் அணியின் கடந்த காலங்களை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒப்புக் கொண்ட அவர், இனி வரும் காலங்களில் அந்த மாற்றத்தை பார்ப்பீர்கள் என தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நடந்த உலக கோப்பை போட்டிகளைப் பற்றி கவலையில்லை என்றும், இனி நடக்க இருக்கும் போட்டிகளை பாகிஸ்தான் அணி நேர்மறையான எண்ணத்துடன் எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பாபர் அசாமிடம், இப்போட்டியில் தோல்வியை தழுவினால் நீங்கள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்களா? என்ற கேள்வியை முன் வைத்தனர். அதற்கு பதில் அளித்த பாபர் அசாம், அதனைப் பற்றி நான் கவலைப் படவில்லை என கூறினார். தோல்வியை எந்த நாட்டு ரசிகர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், அதனால் இப்போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவினால் எனது கேப்டன் பதவியை இழக்க நேரிடும் என்று நான் கவலைப்படவே இல்லை. கடவுள் எனக்காக எதை எழுதி வைத்தாரோ – எனக்குக் கிடைக்கும். ஒரு போட்டியின் காரணமாக, நான் என்னுடைய கேப்டன் பதவியை இழப்பேன் என்று எண்ணவில்லை என தெரிவித்தார்.

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் மட்டும் இந்திய அணியை பாகிஸ்தான் அணியை வீழ்த்த முடியவில்லை ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி உள்ளிட்ட கிரிக்கெட்டுகள் நடப்பதேயில்லை. அவ்வாறு சந்தித்துக் கொண்டே இருந்தால் இப்படியான தோல்விகள் இருக்காது என்று கூறினார். மேலும், அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கூறிய அவர், இந்த உலக கோப்பையை 2 வெற்றிகளுடன் சிறப்பாக தொடங்கியுள்ளோம். எங்களுடைய இலக்கே அந்த வெற்றியை தொடரச் செய்ய வேண்டும் என்பது தான். அதன்படி அனைத்து போட்டிகளையும் அப்படியே எதிர்கொள்வோம் என்றும் பாபர் அசாம் தெரிவித்தார். 

அகமதாபாத் மைதானத்தில் பெருமளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, எம்சிஜி போன்ற பெரிய மைதானங்களில் இதேபோன்று அதிக ரசிகர்கள் முன்னால் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் எல்லாம் பாகிஸ்தான் வீரர்களுக்கு இருக்கிறது. அதனால் வெளியில் இருக்கும் புற அழுத்தங்கள் எல்லாம் எங்களை ஏதும் செய்யாது. நாங்கள் முழுமையாக போட்டியில் கவனம் செலுத்துவோம் என பாபர் அசாம் கூறினார். உலக கோப்பை ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவரை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 7 முறை மோதியிருக்கின்றனர். அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருக்கிறது. 

பந்துவீச்சில் துருப்புச் சீட்டாக ஷகீன் அப்ரிடி இருப்பார் என்றும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இந்த உலக கோப்பையில் இதுவரை பார்ம் இல்லாமல் அவர் இருந்தாலும், இந்திய அணிக்கு எதிராக மிக சிறப்பாக ஷகீன் அப்ரிடி பந்துவீசுவார் என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.