புதுடெல்லி: நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகையை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் தேசிய கூட்டமைப்பு மற்றும் கடன் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமித் ஷா கூட்டுறவு வங்கிகளின் முக்கியத்துவம் குறித்தும் அதை விரிவாக்கம் செய்வது குறித்தும் பேசினார். அப்போது அவர், “கூட்டுறவு வங்கிகளை விரிவாக்கம் செய்வது மிகவும் முக்கியமானது. தற்போது நாடு முழுவதுமுள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ரூ.5.5 லட்சம் கோடி வைப்புத் தொகை உள்ளது. இதை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடியாக நாம் அதிகரிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளை முக்கியத்துவப்படுத்துவதன் வழியாகவே அவற்றின் மீதான மக்களின் பார்வையை நாம் மாற்றிஅமைக்க முடியும். நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை நவீனப்படுத்த வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்பட வேண்டும்.
இதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் விரிவாக்கம் தொடர்பாக ரிசர்வ் வங்கி திட்டமிட்டுவருகிறது. வணிக வங்கிகளைப் போல கூட்டுறவு வங்கிகளுக்கும் முழுநேர இயக்குநரை நியமிப்பது தொடர்பாக கலந்தாலோசனையில் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.