தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தை முன்னெடுக்க கர்நாடக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் குழுவை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தமிழக அரசும் காவிரி படுகையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்து வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடகாவில் போதிய மழை இல்லை, குடிநீருக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற காரணங்களை முன்வைத்து, இந்தாண்டு தமிழகத்துக்குரிய தண்ணீரை காவிரியில் திறக்காமல் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. தமிழக அரசும் காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறி வருகிறது. இதில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு 20 நாட்களுக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. எனினும், அதை அமல்படுத்துவதில் கர்நாடக அரசு மெத்தனம் காட்டி வருகிறது.
இதற்கிடையே, காவிரி விவகாரத்தில் சட்ட நுணுக்கங்களை எதிர்கொள்ள அம்மாநில முதல்வர் சித்தராமையா, செப்.29-ம் தேதி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, சட்ட வல்லுநர்கள் குழுவை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த குழுவின் ஆலோசனையின்படி, காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது கர்நாடக அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க உள்ளனர். அதேபோல, தமிழக அரசும் காவிரி விவகாரத்தை கையாள தமிழகத்தில் உள்ள மூத்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கொண்ட சட்ட வல்லுநர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்பது டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து காவிரி உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் கூறுகையில், “காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. தமிழகத்துக்கு உரிய தண்ணீரை இந்தாண்டு வழங்காததால், டெல்டா பகுதியில் சாகுபடி செய்த குறுவை பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளன. சம்பா, தாளடி சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது.
ஆனால், கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருந்தும், தமிழகத்துக்கு மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட அந்த மாநில அரசு மறுத்து வருகிறது. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஓரணியில் நிற்கின்றன.
இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, அம்மாநில முதல்வர் சித்தராமையா சட்ட வல்லுநர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி அடுத்த நகர்வை தொடங்கியுள்ளார். இந்த நேரத்தில் தமிழக அரசும் அரசியல் காழ்ப்புணர்வுகளை மறந்து, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தும் வகையில் சட்ட வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும்.
தமிழக அரசு தனது பல்வேறு குழுக்களில் நீதிபதி கி.சந்துரு உதவியை கோரி உள்ளது. தற்போது அவரையும், காவிரி மண்ணில், வேளாண் குடும்பத்தில் பிறந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.நாகமுத்து, சமூக நீதி, மதச்சார்பின்மையை உயர்த்தி பேசும் நீதிபதி ஹரி.பரந்தாமன், முன்னாள் அட்வகேட் ஜெனரல் தஞ்சாவூர் ஏ.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய சட்ட வல்லுநர் குழுவை காவிரி வழக்குக்காக தமிழக அரசு அமைக்க வேண்டும்” என்றார்.
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை இந்தாண்டு வழங்காததால், டெல்டா பகுதியில் சாகுபடி செய்த குறுவை பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளன. சம்பா, தாளடி சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது.