வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒடாவா: கனடா – இந்தியா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹிந்துக்கள் கொண்டாடும் நவராத்திரி பண்டிகைக்கு கனடா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூனில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்தியாவில் பணிபுரியும் கனடா துாதரக அதிகாரிகளை அந்நாட்டு அரசு திரும்ப பெற்றது. கனடாவிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.
இந்த நிலையில் ஹிந்துக்கள் கொண்டாடும் நவராத்திரி பண்டிகைக்கு கனடா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவில், ”இந்திய சமூகத்தினருக்கும் நவராத்திரி திருவிழா கொண்டாடும் அனைவருக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஹிந்து மத நம்பிக்கையில் புனிதமான ஒரு பண்டிகையாக நவராத்திரி கருதப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கனடாவில் கணிசமான அளவிற்கு இந்தியர்கள் வசிப்பதால் நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தாலும், இரு நாட்டுக்கு இடையிலான பிரச்னைக்கு மத்தியில் இந்த வாழ்த்து முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால் இரு நாட்டு விரிசலை சரிசெய்ய ட்ரூடோ முயற்சிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement