திண்டுக்கல்: தொடர் மழையால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பி அதிகப்படியான உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், கரையோர மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நட்சத்திர வடிவிலான ஏரி. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் பழநி அருகேயுள்ள நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகள், காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று (அக்.15) இரவு பெய்த தொடர் மழையால் நட்சத்திர ஏரியில் நீர் வரத்து மெல்ல அதிகரித்தது. இன்று (அக்.16) காலை ஏரி முழுவதுமாக (36 அடி) நிரம்பி உபரிநீர் மறுகால் சென்று வருகிறது.
அதிகப்படியான நீர் வெளியேறி வரும் நிலையில், கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்காததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி, கொடைக்கானல் ரோஜா பூங்கா பகுதியில் 30 மி.மீ., பிரையன்ட் பூங்கா பகுதியில் 43.6 மி.மீ. மழை பதிவானது.
ஏரியைச் சுற்றியுள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, ஏரிச்சாலையில் தண்ணீர் தேங்காமல் உடனே அப்புறப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.