சென்னை, பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில், சுங்கத்துறையின் கடைநிலைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த அக்டோபர் 14-ம் தேதி நடைபெற்றது. 7 ஓட்டுநர், 8 கேண்டீன் உதவியாளர், ஒரு சமையலர், ஒரு எழுத்தர் என மொத்தம் 17 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் 1,600 பேர் பங்கேற்றனர். அப்போது, தேர்வு எழுதிய வட மாநிலத் தேர்வர்கள் சிலரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால், தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவர்களை சோதனை செய்து பார்த்தனர். அதில், தேர்வர்கள் தங்கள் காதில் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவி பொருத்தி, வெளியிலிருந்து விடைகளை கேட்டு தேர்வு எழுதிய மோசடி அம்பலமானது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 30 வட மாநிலத்தவர்களைக் கைது செய்தனர். அதில் 28 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள், 2 பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆள் மாறாட்டம் செய்த உத்தரபிரதேசத்தவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். பின்னர், ஆள்மாறாட்டம் செய்தவர்களைத் தவிர, மற்ற அனைவரின் மீதும் வழக்கு பதிவு மட்டும் செய்துவிட்டு, ஜாமீனில் விடுவித்திருக்கின்றனர் காவல்துறையினர்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை பணியிடங்களுக்கான தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ப்ளுடூத் பயன்படுத்தியும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு மோசடியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், “சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்!” என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அஞ்சல்துறை பணிக்கான தமிழ்மொழி போட்டித் தேர்வில் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறாத நிலையில், அனைத்து இடங்களுக்கும் தமிழே தெரியாத ஹரியானா மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வட இந்தியர்கள் மோசடியின் மூலமாகவே வெற்றி பெறுகிறார்களா? என்ற ஐயம் எழுந்திருந்தது. இதை நானும் கடந்த காலங்களில் பலமுறை குறிப்பிட்டிருந்தேன். இப்போது மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த ஐயம் வலுவடைந்திருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20190918_WA0008.jpg)
அரசுப் பணிகள், குறிப்பாக மத்திய அரசு பணிகள், குதிரைக் கொம்பாக மாறி வரும் நிலையில், அந்த பணிகளில் தகுதியானவர்களும், திறமையானவர்களும், உள்ளூர் மக்களும் அமர்த்தப்படுவதற்கு பதிலாக, பணியிடங்களுடன் சிறிதும் தொடர்பில்லாத சிலர் மோசடியான வழிகளில் அந்த வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வது மிகப்பெரிய குற்றம் ஆகும். தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவர்களால் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த மோசடியின் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/recruitment_3942378_960_720.jpg)
அதற்காக, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளுக்காக கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100% பணிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்!” என கோரிக்கை வைத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.