புதுடெல்லி: தனது 26 வார கருவை கலைக்க கோரிய மணமான பெண்ணின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் 27 வயதான திருமணமான பெண் ஒருவர், தனது வயிற்றில் வளரும் 26 வார கருவை கலைக்க அனுமதி கேட்டிருந்தார். மனுவில் அப்பெண், “எனக்கு ஏற்கெனவே இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், இந்தக் கரு திட்டமிடப்படாதது. தற்போது எனது குடும்ப வருமானம், மூன்றாவது குழந்தையை பராமரிப்பதற்கு போதுமானதாக இல்லை. மேலும், இரண்டாவது குழந்தை பிரசவத்துக்கு பின் மனரீதியாக பாதிக்கப்பட்ட நான், அதற்கு மருந்து எடுத்துக்கொண்டேன். எனவே, மூன்றாவது குழந்தையை பிரசவிக்கும் மனநிலையில் நான் தற்போது இல்லை” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இதற்கு முன்பு நடந்த விசாரணையில், “ஒரு குழந்தையை கொல்ல முடியாது. கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பை நிறுத்த மருத்துவர்களுக்கு நாங்கள் உத்தரவிட விரும்புகிறீர்களா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பெண்ணின் உடல்நிலை குறித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், “கருவால், அப்பெண்ணின் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை. கரு ஆரோக்கியமாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து 26 வார கருவை கலைக்கக் கோரிய பெண்ணின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். முன்னதாக, பிரசவத்துக்கான செலவுகளை அரசே மேற்கொள்ளும் என மத்திய அரசு உறுதியளித்ததுடன் பெற்றோர்கள் விரும்பினால், பிறக்கும் குழந்தையை தத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.