'லியோ' அதிகாலை காட்சி : நீதிமன்றத்தை நாடிய தயாரிப்பாளர்

விஜய் நடித்துள்ள 'லியோ' படத்திற்கு அக்டோபர் 19 முதல் 24 வரை தினமும் 5 காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை காட்சிகளை நடத்தி அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பமாகி நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்திற்காக அதிகாலை 4 மணி காட்சிக்கே அனுமதி தர வேண்டும் என்று திரையுலகத்திலிருந்தும் குரல்கள் எழுந்தன. இருப்பினும் அது குறித்து அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.

இதையடுத்து அதிகாலை 4 மணி காட்சி மற்றும் 7 மணி காட்சி வேண்டுமென தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடுவதாக இருந்தது. ஆனால் நாளை(அக்., 17) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த் அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளரின் கோரிக்கை ஏற்கப்படுமா அல்லது அரசு தரப்பில் அதிகாலை 4 மணி காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

இந்த வருட பொங்கலுக்கு அஜித் நடித்த 'துணிவு' அதிகாலை காட்சிகளின் கொண்டாட்டத்தின் போது சென்னையில் ரசிகர் ஒருவர் மரணமடைந்தார். அதன்பிறகே அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதையெல்லாம் யோசிக்காமல் தயாரிப்பு தரப்பில் விடாப்பிடியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.