”மருத்துவ துறையில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்,” என, ‘இஸ்ரோ’ தலைவர் சோம்நாத் பேசினார்.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், மருத்துவம் மற்றும் துணை மருத்துவ மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அதில், சோம்நாத் பேசியதாவது:
மருத்துவ துறையில், ‘சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், மெய்நிகர் இமேஜிங்’ போன்ற உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தான், ராக்கெட் கட்டமைப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.
மனித உடலை அறிந்து கொள்வதற்காக, உங்களுக்கு உதவும் அதே நுட்பம் தான் விண்வெளியில் உள்ளதை அறிந்து கொள்ள, எங்களுக்கு கை கொடுக்கிறது.
குறிப்பாக, ‘ககன்யான்’ திட்டத்தின் கீழ், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக, கணித ரீதியாக மனித உடலினை பகுப்பாய்வு செய்து வருகிறோம்.
இஸ்ரோ சார்பில், மருத்துவ துறைக்கு பெரிதும் பயன்படும், சில செயற்கை உபகரணங்களையும் வடிவமைத்துள்ளோம். இதயத்துக்கு ரத்தத்தை உந்தி தரும் இடது, ‘வென்ட்ரிக்கிள் பம்ப்’ அதில் முக்கியமான ஒன்று.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர நுட்பவியல் வாயிலாக, மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளையும், நோய்களின் தரவுகளையும் ஒருங்கிணைக்க முடியும். ஒரு நோயாளிக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையை, ஏற்கனவே உள்ள பல தரவுகளுடன் ஒப்பீடு செய்து, துல்லியமாக பிரச்னையை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க முடியும்.
எனவே, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை தரவுகளை கையாண்டு, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பிரத்யேக படிப்புகளை, அறிமுகம் செய்ய வேண்டும்.
வரும் காலங்களில், மருத்துவ சிகிச்சைகளை முடிவு செய்வதில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர நுட்பவியல் முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி, பதிவாளர் அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்