உடலை இயக்கும் இடையறாத இன்ஜின்… இதயத்தை அறிந்து கொள்வோமா…?

மனித உடலின் மகத்தான உறுப்பு இதயம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29-ம் நாள் உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது. “இதயத்தை பயன்படுத்துவோம். இதயத்தை அறிந்துக்கொள்வோம்” என்பதை 2023 -ம் ஆண்டின் இதய தின கருப்பொருளாக கொள்வோம் என்கிறார் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த இதயநோய் மருத்துவர் சுந்தர். இதயநலன் குறித்து அவர் கூறுவதைப் பார்ப்போம்…

மனிதனின் வாழ்நாள் முழுவதும் இடையறாது துடித்து ஆக்ஸிஜன் நிரம்பிய ரத்தத்தை உடலெங்கும் செலுத்தும் சென்ட்ரல் ஸ்டேஷனாக விளங்குகிறது. உடல் சீராக இயங்க இதயத்தின் பங்கு அளப்பரியது.

ஹார்ட் அட்டாக்

வாழ்வின் பெரும் துயரங்களில் ஒன்று திடீர் மரணமாகும். இதற்கு அடிப்படை காரணங்களில் ஒன்று மாரடைப்பு. இது இப்போது ஏற்படுகிற புதிய பாதிப்பல்ல.. இதனால் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே எகிப்தியர்கள் பல பேர் இதயக்கோளாறால் இறந்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த வருடம் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 28% இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களே (ICMR report in RS). உலக அளவில் 25 வயதைக் கடந்தவர்களில் மூன்றில் ஒருவர், இதய நோய்க்கு முதல் வித்தாக விளங்குகிற ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஹார்ட் அட்டாக் என்பது வயதானவர்களுக்கு மட்டும் வருகிற பாதிப்பு என்ற கருத்து இருந்தது. ஆனால், தற்போது 20 வயதைக் கடந்த யாருக்கும் எப்போது வேண்டுமாலும் ஹார்ட் அட்டாக் வரும் என்பதை சமீப செய்திகள் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள்:

பொதுவாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புகைபிடித்தல், பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் மரபணுரீதியான பாதிப்பு, அதிகப்படியான மன அழுத்தம், LDL (low-density lipoprotein) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவு மாறுபாடு, போதுமான உடல் உழைப்பின்மை, உடலுக்குத் தேவையான தூக்கமின்மை, வாழ்வியல் முறையில் மாற்றம், உணவு முறையில் மாற்றம் போன்றவை மாரடைப்பு ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணங்களாக உள்ளன.

Senior Interventional Cardiologist, Dr Sundar.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:

நெஞ்சுவலி, குளிர்ந்த வியர்வை, மூச்சுவிடுதலில் சிரமம், தோள் பட்டைகளில் வலி உண்டாகுதல், மூக்கிற்கு கீழ் இடுப்பிற்கு மேல் இடைப்பட்ட பகுதியில் அசெளகர்யமாக உணர்தல், நெஞ்சு எரிச்சல் இவையெல்லாம் ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகளாகும். இதில் நெஞ்சு எரிச்சல் மட்டும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அறிகுறியாகும். ஏனெனில் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டாலே அது கேஸாக (Gas) தான் இருக்கும் என பலர் எண்ணுகிறார்கள். அவ்வாறு நெஞ்சு எரிச்சலை சாதாரணமாக எண்ணிக் கடந்து போகாமல் உடலில் இது போன்று எந்த அறிகுறி ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி தங்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமானதாகும்.

திடீர் படபடப்பு (Palpitation) இதயம் வேகமாகத் துடித்தாலோ அல்லது மெதுவாகத் துடித்தாலோ ஏற்படும். இதை இரண்டாகப் பிரிக்கலாம் சாதாரண மற்றும் அசாதாரண படபடப்பு. இந்த அசாதாரண படபடப்பு மூச்சு வாங்குதல், மயக்கம், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இவையும் மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். சாதாரண படபடப்பு பெரியதாக நம்முள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

மாரடைப்பு வராமல் தடுப்பதற்கான வழிகள்:

உணவு முறை மூலமாகவும், உடற்பயிற்சி மூலமாகவும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.

மாரடைப்பு

உணவு முறைகளில் மாற்றம்:

இன்றைய அவசரயுகத்தில் நாம் எதற்குமே அதிக நேரம் ஒதுக்குவதில்லை. அதே நிலை தான் உணவிலும். 5 நிமிடங்களில் தயார் செய்து 2 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும் என்று அவசரம். இதற்கு நம் வேலையும் நாம் இருக்கும் சூழலும் கூட காரணமாக இருக்கலாம்.

அதனால், நம் உடலை ஆரோக்கியமாக மாற்ற வேண்டுமானால் உணவுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு, இதயத்தைப் பாதுக்காக்க கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்…

தானியம் : முழுதானியம், கோதுமை, கம்பு, சோளம், ராகி, பழுப்பு அரிசி

பயறு : தட்டைப்பயறு, பச்சைப்பயறு, உளுந்து, கொண்டைக்கடலை, காராமணி

காய்கறி : சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், கோவைக்காய், வெண்டைக்காய்

கனி : ஆப்பிள், வாழைப்பழம், சிட்ரஸ் பழங்கள், திராட்சை

நட்ஸ் : சியா விதைகள், ஆளி விதைகள், பாதாம் பருப்பு, வால்நட்

தோல் நீக்கிய சிக்கன், முட்டையின் வெள்ளைக்கரு, சால்மன் மீன், டூனா மீன் மற்றும் கிரீன் டீயில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் அதை தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.

உடற்பயிற்சியின் மூலம் இதயநலத்தைப் பேண…

நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், பவர் வாக்கிங், நீச்சல், சைக்கிளிங், புஷ் அப், ப்ளாங்க், படிக்கட்டு ஏறுதல், ரன்னிங் போன்றவற்றில் ஈடுபடலாம்.

நடைப்பயிற்சி

இவை மட்டுமல்லாமல் நம்முடைய கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு, உடல் எடை ஆகியவை சீராக உள்ளனவா என தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

உடலுக்குத் தேவையான தூக்கத்தையும், ஓய்வையும் கொடுக்க வேண்டும். மேலும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்.

இன்பமாய் வாழ இதய நலன் காப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.