பெங்களூரு,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 156 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து தோல்விக்கு பின் இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியதாவது,
இந்த தோல்வி உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று. ஒரு கேப்டனாக எனக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. அதோடு எங்களது அணி வீரர்களுக்கும் இந்த தோல்வி பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கும்.
நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டின் பாதி அளவை கூட இந்த போட்டியில் வெளிப்படுத்தவில்லை. அனுபவ வீரர்கள் எங்களிடம் நிறைந்து இருந்தாலும் அந்த அனுபவத்திற்கு ஏற்ற செயல்பாடு எங்களிடமிருந்து வெளிவரவில்லை.
ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது. இருந்தாலும் ஒரு பதட்டமான வேளையில் இது போன்ற தோல்விகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் நாங்கள் அடைந்த தோல்விக்கான காரணத்தை இதுதான் என்று சுட்டிக் காட்டுவதற்கு எதுவும் இல்லை.
எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தவில்லை அது மட்டுமே ஒரு குறையாக இருக்கிறது. மற்றபடி அணி தேர்வில் எந்த ஒரு குறையும் இல்லை. எங்களுடைய திறனுக்கு ஏற்ப நாங்கள் எங்களுடைய செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
இந்த போட்டியில் நிறைய தவறுகளை செய்து விட்டோம். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே எங்களது தரத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்படவில்லை. இனிவரும் போட்டிகளில் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.