டோங்க் (ராஜஸ்தான்): தன்னை மன்னித்துவிடுமாறு ராகுல் காந்தி கூறியதாக ராஜஸ்தான் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட், டோக் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சச்சின் பைலட், “முதல்வர் யார் என்பதை வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்களும், கட்சி மேலிடமும் முடிவு செய்யும். தற்போது தனது நோக்கம், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் வெற்றியை ஈட்டுவது குறித்துதான்” என தெரிவித்தார்.
முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல் போக்கு இருந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இது குறித்து என்னிடம் பேசினர். அப்போது, தங்களை மன்னித்து விடுமாறும், கடந்த கால கசப்புணர்வை மறந்துவிடுமாறும் கேட்டுக்கொண்டனர். முன்னோக்கிச் செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தினர். எனவே, நாங்கள் அனைவரும் முன்னோக்கிச் செல்கிறோம். முதல்வர் யார் என்பதை சரியான நேரத்தில் கட்சி சரியான முடிவை எடுக்கும்” என கூறினார்.
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக நடத்தப்படும் அமலாக்கத் துறை சோதனை குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சச்சின் பைலட், “ராஜஸ்தானில் வெற்றி வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. பாஜகவின் செயல்படும் விதம் மற்றம் திறமை குறித்து மக்கள் அறிவார்கள். மிகப் பெரிய வெற்றியுடன் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத் துறை விசாரணை ஏன் நடத்தப்பட வேண்டும்? மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒட்டுமொத்த நாடே கூறுகிறது. நாங்கள் எங்கள் கட்சியின் வெற்றிக்காக ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்களின் கூட்டு முயற்சி எது என்றால், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைப்பதுதான்” என தெரிவித்தார்.