இனி சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, இனிமேல் வருகின்ற வாரம் முதல் சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக மருத்துவம் மற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனைக்கும் இடையே, பாத மருத்துவம் – நீரழிவு நோய் அறுவை சிகிச்சை சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (அக்.31) கையெழுத்தானது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: “தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி இருக்கிறார். அனைவரும் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக முதல்வரும் மத்திய அரசிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நீட் விலக்கு குறித்தான அவசியம் குறித்து எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் இடத்திலும், நீட் விலக்கு குறித்து தமிழக முதல்வர் பேசி, அதற்குண்டான கடிதத்தினையும் கொடுத்துள்ளார்.

மழைக்காலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒரே நாளில் 1000 இடங்களில் நடத்தப்படும் என்று அறிவித்து, 2000-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அக்.29 அன்று தமிழகம் முழுவதும், 1,943 முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் 1,04,876 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 335 பேருக்கு காய்ச்சல், 254 பேருக்கு இருமல் மற்றும் சளி கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்கள் வேண்டாம் என்றும் சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கையினை வைத்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளரிடமும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரிடமும் ஆலோசிக்கப்பட்டு, இனிமேல் வருகின்ற வாரம் முதல் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறை வரலாற்றிலேயே தொடர்ந்து 10 வாரங்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.