எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஐபோன்களை குறிவைக்கும் அரசு ஆதரவு ஹேக்கர்கள்?

புதுடெல்லி,

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் ஒன்று ஐபோன். நவீன வசதிகள் மட்டுமின்றி, பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் சர்வதேச அளவில் ஐபோன்கள் வரவேற்பு பெற்று வருகின்றன. இருந்த போதிலும், பிரபலங்களின் ஐபோன்களை குறிவைத்து ஹேக்கர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஐபோன்கள், ஹேக்கர்களின் தாக்குதல் முயற்சிக்கு ஆளாவதாக ஆப்பிள் நிறுவனம் தரப்பில் எச்சரிக்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், சிவசேனாவின்(உத்தவ்) பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எம்.பி.க்கள், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை மின்னஞ்சல்கள் வரப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்கள் மொபைல் சாதனங்களை, அரசு ஆதரவுடன் தாக்குபவர்கள் தொலைதூரத்தில் இருந்தபடி ஹேக் செய்ய முயற்சிப்பது குறித்து ஆப்பிள் நிறுவனத்தார் எச்சரிக்கை மெயில் அனுப்பியுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு வந்த எச்சரிக்கை மெயிலின் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்ட மஹுவா மொய்த்ரா, ‘சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா’ ஆகியோருக்கும் இதேபோன்ற எச்சரிக்கைகள் வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தகவலை ஆப்பிள் நிறுவனம் தற்போது மறுத்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.