சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் கடந்த 29-ம் தேதியன்று, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் சென்னையிலிருந்து சேலம் வந்த விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை பயணித்து வந்தார். சேலம் வருகைபுரிந்த ஆளுநருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் பூங்கொத்து வழங்கி, விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை கர்நாடக மாநிலத்துக்கு செல்லவிருந்ததால், சேலம் அஸ்தம்பட்டியில் அமைந்திருக்கும் விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்திவிட்டு, மாலை கிளம்புவதாக இருந்தார். கோவா ஆளுநரின் சேலம் வருகை என்பது, முன்கூட்டியே அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரிந்த ஒன்றாக இருந்து வந்தது.
ஆனால், சேலம் வருகைபுரிந்த ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு அரசின் மூலம் வழங்கப்படும் அங்கீகாரம் என்பது வழங்கப்படமால் போய்விட்டதாக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை கிளம்பியது. காரணம், ஆளுநர் விமான நிலையத்திலிருந்து பயணித்து சென்ற வாகனத்தில் தேசியக்கொடி இல்லாமல் இருந்திருக்கிறது.
தேசியக்கொடி இல்லாத காரிலேயே விருந்தினர் மாளிகை வரை, ஆளுநர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் முன்கூட்டியே ஆராய்ந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அதிகாரிகள், ஆளுநரை அவமதிக்கும்விதமாக தேசியக்கொடி இல்லாத வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஒருபக்கம் பா.ஜ.க-வினர், `ஆளுநரை அவமதித்தது மாநில, மாவட்ட நிர்வாகங்களின் திட்டமிட்ட செயல்’ என்று கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளவுந்தராஜன், “நீங்கள் சொல்லும் செய்தியை நானும் இணையத்தில் படித்தேன். ஆளுநர் வருகை உள்ளிட்ட ப்ரோட்டோகாலுக்கென்றே தனியாக எப்போதும் தேசியக்கொடி பொருத்திய வாகனம் இருக்கும். அப்படி இருக்கும் நிலையில், ஏதோ கடமைக்கென்று ஒரு வண்டியில் ஆளுநரை ஏற்றினார்களா அதிகாரிகள்… இது முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கைக் காட்டுகிறது. இதை ஆளுநரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கிறேன்.
இதனை மாவட்ட கலெக்டர்தான் வெரிஃபை பண்ணிருக்கணும். ஒரு மாநிலத்தின் ஆளுநர் எங்கு போனாலும், ஆளுநர்தான். அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை என்பது இந்தியாவுக்குள் எங்கே போனாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அந்த வகையில், ஒரு சில இடங்களில் மாவட்ட ஆட்சியர்களே வராமல் இருக்கிறார்கள். காரணம், அப்படி மரியாதை நிமித்தமாக வந்தால் அவர்களுக்கு அரசியல்ரீதியாக சாயம் பூசிவிடுவார்களோ என்று அச்சப்படுகின்றனர்” என்றார்.