ஹமாசின் ராணுவ திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம் – இஸ்ரேல் பிரதமர்

டெல் அவிவ்,

காசாவில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சூளுரைத்து போர் நடத்தி வரும் இஸ்ரேல், அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் ஐ.நா. தீர்மானத்தையும் நிராகரித்து தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

வான்வழி மற்றும் கடல் வழி தாக்குதலை முதலில் தொடங்கிய இஸ்ரேல், அடுத்த கட்டமாக காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதலையும் தொடங்கி இருக்கிறது. இதை நேற்று மேலும் விரிவுபடுத்தியது.

காசா நகரின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள், கவச வாகனங்கள், புல்டோசர்கள் ஆக்கிரமித்து உள்ளன. அத்துடன் ஏராளமான ராணுவ வீரர்களும் ஹமாஸ் அமைப்பினரின் வசிப்பிடங்களை குறிவைத்து முன்னேறி வருகிறார்கள்.

இதில் முக்கியமாக காசாவின் முக்கிய நெடுஞ்சாலையான வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை இஸ்ரேலிய படைகள் கைப்பற்றி உள்ளன. இந்த சாலையின் குறுக்கே நிற்கும் இஸ்ரேல் பீரங்கிகள், தங்களை நோக்கி முன்னேறும் வாகனங்களை எச்சரித்து வருகின்றன. மீறி வரும் வாகனங்கள் மீது குண்டுமழை பொழிவதை சர்வதேச பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் ராணுவ வாகனங்கள் குடியிருப்பு பகுதிகள் வழியாக காசாவின் உள்பகுதியை நோக்கி முன்னேறுவதுடன், ராணுவ வீரர்கள் கட்டிடங்களில் நிலை கொண்டு தாக்குதலுக்கு தயாராகும் பகீர் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இவ்வாறு தங்கள் பகுதிக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினரும் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

மேலும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் இந்த சண்டை நடந்து வருவதால், அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். இதனால் உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது.

முன்னதாக இந்த போரில் காசா பகுதியில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். மேலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைப்போல இஸ்ரேல் தரப்பிலும் 1,400-க்கு அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை மட்டுமின்றி மேலும் ஆயிரக்கணக்கானோர் இரு தரப்பிலும் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றன. இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தி இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் ஹமாசின் ராணுவ திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், “நாங்கள் போரின் மத்தியில் இருக்கிறோம். ஹமாசின் இராணுவம் மற்றும் ஆளும் திறன்களை அழிக்கும் தெளிவான இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். நாங்கள் இதை முறையாகச் செய்கிறோம். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காசா பகுதியில் தரைவழி ஊடுருவலை விரிவுபடுத்தியுள்ளது.

முதல் தடுப்பு நிலை முடிந்துவிட்டது. 2-வது நிலை, வான்வழியாக அவர்களைத் துரத்துவது எல்லா நேரத்திலும் தொடர்கிறது. 3-வது நிலை – காசா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் தனது தரை ஊடுருவலை விரிவுபடுத்தியுள்ளது. இது அளவிடப்பட்ட, மிக. சக்தி வாய்ந்த, முறையான, படிப்படியாக முன்னேறும் படிகளாக உள்ளது” என்று பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.