கோவா முதல்வரின் திடீர் வருகை `முதல்' ஆளுநரை விமர்சித்த முதல்வர் வரை! – தேவர் குருபூஜை ஹைலைட்ஸ்

வழக்கமான நாளிலேயே பரபரப்பை ஏற்படுத்தும் தேவர் ஜயந்தி விழா, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரம் என்பதால், இந்தாண்டு கூடுதல் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் நடந்து முடிந்துள்ளது.

அதிலும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடந்த சம்பவங்கள், அவர் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்

டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி-க்கள், எஸ்.பிக்கள் தலைமையில் 12,000 காவல்துறையினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டும், 35 சோதனைச்சாவடிகள், 100 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அது சம்பந்தமான வீடியோக்கள், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நேற்று  நடந்த குருபூஜை விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் முதல் மற்ற கட்சிகளின் தலைவர்கள் வரை, அனைவரும் வழக்கத்தைவிட அதிகமாக அரசியல் பேசியதும், பொதுமக்களால் பேசப்பட்டு வருகிறது.

நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது முத்துராமலிங்க தேவருக்கு செய்த சிறப்புகளையும், முக்குலத்தோர் சமுதாயத்திற்கு செய்த திட்டங்கள் பற்றியும், ஆரியம், திரவிடம் குறித்தும், பெட்ரோல் குண்டு விவகாரம் குறித்து ஆளுநர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தும் செய்தியாளர்களிடம் பேசினார். ‘இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டது’ குறித்து  ஒரு செய்தியாளர் கேட்க, ‘அது குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்கும்படி, டி.ஆர்.பாலுவுடன் மீனவப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளேன்’ என்று உடனே பதில் அளித்தார்.

தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி

பசும்பொன் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளார்கள் என்ற தகவல் பரவியதால், போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டது. அது போதாதது என்று கட்சி நிர்வாகிகளின் ஏற்பாட்டில், தனியார் பாதுகாவலர்கள் அதிகம் நியமிக்கப்பட்டார்கள். அப்படியிருந்தும் எடப்பாடி பழனிசாமி வருகின்ற வழியில் பல இடங்களில் எதிர்ப்பு கோஷங்கள் ஒலித்தன. அங்கு மட்டுமன்றி தேவர் நினைவிடத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோதும், எதிர்ப்பு கோஷங்கள் அதிகம் எழும்பின. நினைவிடத்தினுள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும்போதே, வெளியில் `துரோகி எடப்பாடி ஒழிக’ என்று சிலர் ஆவேசமாக கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் உள்ளே இருந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, உடன் வந்த திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் போன்றோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அங்கிருந்து வேக வேகமாக கிளம்பிய பழனிசாமி, செய்தியாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவரின் பெருமையைப் பேசிவிட்டு, உடனே அங்கிருந்து சென்றார்.

அப்போது அவரின் காரை நோக்கி காலணிகள் வீசப்பட்டன. அ.தி.மு.க கொடிக்கம்பங்களும் சாய்க்கப்பட்டன. அதன் காரணமாக, அங்கு பெரும் சலசலப்பு நிலவியது.

`மோடி வருகிறார், நட்டா வருகிறார்’ என்று பா.ஜ.க-வினரால் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட நிலையில், திடீரென்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்தை அழைத்து வந்திருந்தனர். அவர் மதுரையிலும், பசும்பொன்னிலும் திரண்டு வந்த மக்களைப் பார்த்து மிரண்டு போனார். அங்கு செய்தியாளர்களிடம் பேசியவர், “தேசிய தலைவர் நட்டாவின் பிரதிநிதியாக வந்துள்ளேன். பசும்பொன்னை புண்ணிய பூமியாக நினைத்து வணங்குகிறேன்” என்றார்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதே அதற்கு உதாராணம்” என்று தமிழக அரசை விமர்சித்துவிட்டுச் சென்றார்.

கோவா முதல்வருடன் அண்ணாமலை

அமைதியாக வந்த ஓ.பி.எஸ்ஸிடம் எடப்பாடிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இந்த புண்ணிய பூமிக்கு வருகின்ற யாருக்கும் எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று சமூக வலைதளங்களில் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்” என்றார்.

மாலையில் வந்த டி.டி.வி.தினகரனோ, “எடப்பாடி பழனிசாமி செய்த அரசியல் தவறுகளால், அவரால் தென் மாவட்டங்களுக்கு நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களையும் நான்கு ஆண்டுகளாக அவர் ஏமாற்றியுள்ளார். மக்கள் அவர்மீது கோபமாக உள்ளனர். ஆளுநர் அரசியல்வாதிபோல செயல்படுகிறார். அதேநேரம் தி.மு.க ஆட்சிக்கு கடிவாளம் தேவைப்படுவதால், ஆளுநரின் செயல்பாடு சரியானதுதான்” என்று பேசிவிட்டுச் சென்றார்.

வி.கே.சசிகலாவோ வி.ஐ.பி வரும் வழியில் வராமல், பொதுமக்கள் வரும் வழியில் பெண்கள் கூட்டத்துடன் வந்தார். வருவதற்கு முன்பு மதுரை கோரிப்பாளையத்தில் அரசியல் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் பேசியவர், பசும்பொன்னில் அமைதியாக சென்றுவிட்டார்.

‘எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டது அநாகரிகமான செயல்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துப் பேசினார்.

இந்த குருபூஜை விழாவுக்கு முதல் நாளோ, மறுநாளோ ஆளுநர் ரவி வருவார் என பலரும் எதிர்பார்த்தனர். அப்படி வந்தால் சரியாக இருக்காது என்று சொல்லப்பட்டதால், சென்னை ஆளுநர் மாளிகையிலேயே அவர் அஞ்சலி செலுத்தினார்.

ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆனால், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் திடீர் வருகை புரிந்து, மரியாதை செலுத்தினார். அதேபோல மதுரை ஆதீனமும் அஞ்சலி செலுத்தினார். ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்களும், வைகோ, பிரேமலதா, திருநாவுக்கரசர், தனியரசு, அன்புமணி, ரவிபச்சமுத்து என பல்வேறு கட்சியினரும் வருகை தந்து, முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.