நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், மோடி, அதானி ஆகியோர்மீதும் கடுமையான வாதங்களை முன்வைப்பவர்களில் முக்கியமானவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. இவர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வியெழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் பணம், பரிசுப்பொருள்களை லஞ்சமாகப் பெற்றதாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
அதோடு, மக்களவை இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான தனது லாகின் ஐ.டி-யை ஹிராநந்தனியிம், அவரது ரியல் எஸ்ட்டே நிறுவனமும் தங்கள் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள மஹுவா மொய்த்ரா அனுமதித்தார் என்றும் நிஷிகாந்த் துபே கூறினார். இது குறித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நிஷிகாந்த் துபே புகார் கடிதம் எழுதியதையடுத்து, இதில் நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து தன்னை வெளியேற்ற நினைப்பவர்களில் தனது தலைமுடியைக்கூடத் தொட முடியாது என மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார்.
தங்களின் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலர்ட் மெசேஜ் அனுப்பியது குறித்து ஊடகத்திடம் பேசிய மஹுவா மொய்த்ரா, “முன்னதாக 2021-ல், உளவு பார்ப்பதற்காக இஸ்ரேலிலிருந்து பெகாசஸ் ஸ்பைவேரை அவர்கள் (பா.ஜ.க) கொண்டுவந்தார்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. ஆனாலும், அதில் எதுவுமே வெளிவரவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் நடக்கிறது.
2024-ல் தேர்தல் நடக்கவிருப்பதால், அவர்கள் முக்கியப் பிரச்னைகளிலிருந்து திசைதிருப்ப விரும்புகிறார்கள். எம்.பி-க்களுக்கு ஏதாவது நேர்ந்தால், சபாநாயகர் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து, சிறப்புரிமைக்குழுக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். ஆனால், நாம் என்ன பார்க்கிறோம்… நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இ-மெயில் லாகின் குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது. இது முழுக்க முழுக்க குப்பை. அதை நான் தகர்க்கத்தான் போகிறேன். அவர்கள் என்னை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றவும், சஸ்பெண்ட் செய்யவும் விரும்புகிறார்கள். ஆனால், அவர்களால் என் தலையில் ஒரு முடியைக்கூடத் தொட முடியாது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.