`பெண் கர்ணன்' மேயர் பிரியா முதல் `What are our duties?'- BJP கவுன்சிலர் பேச்சு வரை; மாமன்றக் கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (31-10-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், பகுதிகள் மற்றும் மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர்.

மேயர் பிரியா

அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 35-வது வார்டு ம.தி.மு.க கவுன்சிலர் சு.ஜீவன், “சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்கள், அங்கு பணியாற்றும் ஆயாக்கள் உள்ளிட்ட ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அவர்கள் 500 பேரும் ஊதிய உயர்வுடன், பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும்” எனக் கோரிக்கை வைத்தவர், மகாபாரதத்தின் கர்ணன், தருமர் புரணாக்கதை ஒன்றை உதாரணமாகக் கூறிவிட்டு, “இந்த கோரிக்கையை மட்டும் மேயர் பிரியா நிறைவேற்றினால் அவரை `பெண் கர்ணன்’ என அனைவரும் பார்ப்பார்கள்” எனப் பேசினார். இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த மேயர் பிரியா, “நிச்சயம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து பேசிய சில கவுன்சிலர்களும், தங்களின் கோரிக்கையை மேயர் பிரியா நிறைவேற்றினால் அவர்தான் `பெண் கர்ணன்’ என ஐஸ் வைத்தனர்.

அதைத் தொடர்ந்து பேசிய 145-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சத்தியநாதன், “நெற்குன்றம் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர் வெண்ணிலா சரியான நேரத்துக்குப் பணிக்கு வருவதில்லை. இதனால் நாள்தோறும் அந்த மருத்துவமனைக்கு வந்து போகும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவரை நியமிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, “என்னுடைய மூன்று ஆண்டுகளுக்கான (மாதம் ரூ.10,000) மதிப்பூதியத்தை சென்னை மாநகராட்சியில் இருக்கும் முதியோர் இல்லங்களுக்கு வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

அதேபோல, 84-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ஜான், “எனது வார்டு இருக்கும் மண்டலத்தில் போதிய குடிநீர் வசதி இல்லை! பலமுறை கோரிக்கைவைத்தும் மெட்ரோ வாட்டர் நிர்வாகம் எதையும் சரிசெய்யவில்லை. வசதி படைத்தவர்களின் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு மட்டுமே முறையாக உடனடிக் குடிநீர் வசதிகளை செய்துதருகின்றனர். ஏழை மக்கள் வசிக்கக்கூடிய யாதவா தெரு, பெரியார் நகர், கொரட்டூர், கச்சரவாக்கம், ஹவுஸிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒரு முறைதான் மெட்ரோ வாட்டர் குழாயில் தண்ணீர் விடுகிறார்கள். புழல் ஏரி நிரம்பியிருக்க, அதிலிருந்து சப்ளை செய்யப்பட்டுவந்த தண்ணீரையும் நிறுத்திவிட்டார்கள். பல இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. ஓராண்டாகக் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை” எனச் சரமாரியாகக் குற்றம்சாட்டினார். அதேபோல மற்றொரு கவுன்சிலரும், “தொடர்ந்து பிரச்னை செய்துவரும் மெட்ரோ வாட்டர் துறையை சென்னை மாநகராட்சியுடன் இணைத்துவிடலாமே?” எனக் கேள்வி எழுப்பினார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

தொடர்ந்து 134-வது வார்டு பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசத் தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே ஆங்கிலத்தில் தனது உரையைத் தொடங்கி, அனைவரையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு `நமஸ்காரம்’ என்றவர், `ஆன்மிக அரசியல்தான் எல்லாவற்றுக்கும் காரணம்’ என்ற முத்துராமலிங்கத் தேவருக்கும், வல்லபாய் படேலுக்கும் பிறந்தநாள் வாழ்த்தைக் கூறினார். தொடர்ந்து தனது வார்டு பிரச்னைகளைப் பேசுவதற்கு பதிலாக, `What is our Duties and representation…’ என ஆரம்பித்து ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போது, சிலர் அவையைவிட்டு எழுந்து சென்றனர். உடனே துணை மேயர் மகேஸ்குமார் குறுக்கிட்டு, “உங்க பகுதி பிரச்னை, கோரிக்கையைச் சொல்லுங்க!” எனக் கூற, மீண்டும் ஆங்கிலத்துடன் தமிழும் கலந்து பேசினார். “சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, நிதித்துறை செயல்பாடுகள் மர்மமாக இருக்கின்றன, சென்னை மாநகராட்சிக்கு வரும் டொனேஷன்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்” எனக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து 57-வது வார்டு உறுப்பினர் ராஜேஷ், தங்கள் பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களுக்கு பெயர்ப்பலகை இல்லை என்று கூற, துணை மேயர் மகேஸ்குமார், “நானே இது குறித்து கோரிக்கை வைக்கலாமென்று இருந்தேன். சென்னை மாநகராட்சியின் அனைத்துத் தெருக்களிலும் புதிதாக போர்டுகள் வைக்க வேண்டும். அந்த போர்டுகளில் மாமன்ற உறுப்பினரின் பெயரையும் இடம்பெறச் செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த கமிஷனர் ராதாகிருஷ்ணன், “சென்னை மாநகராட்சியில் 35,000-க்கும் மேலாக தெருக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. வரும் நிதியாண்டில் அனைத்துத் தெருக்களிலும் புதிய போர்டுகள் வைக்கப்படும்” என உறுதியளித்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

தொடர்ந்து 98-வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் பிரியதர்ஷினி, “சென்னை மாநகராட்சியிலுள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்கப்படுகிறது. அவர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க, மாணவர்களுக்கான போதை மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்” என்றார். அதேபோல, 106-வது வார்டு கவுன்சிலரும், ஆளுங்கட்சி தலைவருமான இராமலிங்கம், “சென்னை மாநகராட்சியில் சாலைகளில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துவிட்டன. மாடுகளை வண்டிகளில் பிடிக்கப்போகும் ஊழியர்களும், மாட்டின் உரிமையாளர்களால் மிரட்டப்படுகின்றனர். இதைப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

இறுதியாகப் பேசிய துணை மேயர் மகேஸ்குமார், “சென்னை மாநகராட்சியின் பல இடங்களில் பேருந்து நிழற்குடைகள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றைச் சீரமைக்க வேண்டும். வரும் நிதியாண்டில் அதற்கான நிதி ஒதுக்கி, புதிய பேருந்து நிழற்குடைகள் அமைத்துத்தர வேண்டும். அதேபோல, புதிய நடைபாதைகளும் அமைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு, தொடர்ந்து மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரிய பதில்களை அளித்தனர். இறுதியாக, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மாமன்றக் கூட்டம் நிறைவடைந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.