மதுரை: கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து 23 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே 2018-ல் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக ஆயுதங்களுடன் ஒரு கும்பல் மற்றொரு தரப்பினர் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சண்முகநாதன், ஆறுமுகம், சத்திரசேகர் ஆகியோர் உயிரிழந்தனர். மோதலில் காயமடைந்த தனசேகரன் 2020-ல் இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக பழையனூர் போலீஸார் 33 பேரை கைது செய்தனர். இதில் இருவர் விசாரணை நிலுவையில் இருந்தபோது இறந்தனர். 3 சிறுவர்கள், தலைமறைவாக ஒருவர் தவிர்த்து 27 பேர் மீதான வழக்கை விசாரித்த சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
தண்டனையை ரத்து செய்யக்கோரி 23 பேர் உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதனை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது மேல்முறையீடு செய்யாமல் சிறையில் இருந்து வரும் அஃவி(எ)அக்விராஜ், ராஜேஷ்(எ) ராஜேஷ்வரன், மைக்கேல் முனியாண்டி மற்றும் ரவி(எ)முகிலன் ஆகியோரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதிகள் அந்த 4 பேரிடமும் நீங்கள் மேல்முறையீடு செய்யாததால் மற்ற 23 பேரின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை பாதிக்கிறது. உங்களுக்காக வழக்கறிஞர் வைத்துக் கொள்ளலாமா? அல்லது சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்கறிஞரை நீதிமன்றமே நியமிக்கலாமா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஒருவர் தான் வழக்கறிஞர் ஏற்பாடு செய்திருப்பதாகவும், மற்ற 3 பேர் தங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், 4 பேரும் தங்கள் தரப்பில் வழக்கறிஞரை நியமித்து மேல்முறையீடு வழக்கை நடத்தலாம், இல்லாவிட்டால் 23 பேரின் மேல்முறையீடு விசாரிக்கப்படும். விசாரணை நவ. 15-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.