புதுச்சேரி: “தடுப்புகள் இல்லை என்று பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்!”– திமுக-வைச் சீண்டிய தமிழிசை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “அனைத்து மாநில நாள்களையும் ராஜ்நிவாஸில் கொண்டாடும்போது, தேச ஒற்றுமை ஏற்படும். பல மொழிகளைப் பேசினாலும், பல மாநிலங்களாக இருந்தாலும், கலாசாரத்தால் நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். யாராலும் பாதுகாப்பற்ற நிலை எனக்கு வராது. புதுச்சேரியில் நான் பதவியேற்றவுடன் மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அவை அனைத்தையும் எடுக்கும்படி கூறினேன். மத்திய பாதுகாப்புப் படை திரும்பச் சென்றது. அதன் பிறகு ஓரடுக்குப் பாதுகாப்பு மட்டும் இருந்தது. அதையும் திரும்பப் பெறும்படி நான் கூறினேன். ஆனால் அது பாதுகாப்பு ஏற்பாடு என்று போலீஸார் கூறினர். பாதுகாப்பற்ற நிலை புதுச்சேரியில் இல்லை. பாதுகாப்பு அதிகாரிகள் அதைப் பார்த்துக்கொள்வார்கள். இது பொதுமக்களுக்கான சாலை. அதனால்தான் திறந்திருக்கிறோம்.

பேரிகார்டுகள் அகற்றப்பட்டு, விடுவிக்கப்பட்ட சாலைகள்

பாதுகாப்புத் தடுப்புகளை எடுக்கும்படி கூறிய எதிர்க்கட்சி சகோதரர்களிடம், உங்களால் எந்த ஆர்ப்பாட்டமும் இங்கு நடக்கக் கூடாது என்பதை கோரிக்கையாக வைக்கிறேன். பிரச்னை என்றால் நேரில் வந்து என்னைச் சந்தித்துப் பேசுங்கள். எப்போதும் ஆரோக்கியமான சூழல் நிலவ வேண்டும். தடுப்புகள் இல்லாததால், பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள். தெலங்கானாவில் மசோதாவுக்குக் கையெழுத்து போடாததால் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். இது அந்தந்த மாநிலங்களின் பிரச்னை. தமிழக அரசின் மசோதாவை அந்த ஆளுநர் எதிர்கொள்கிறார் என்பது இரு அமைப்புகளுக்கான பிரச்னை. அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. புதுச்சேரியில் அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள், பேரவைத் தலைவர், முதல்வர், அமைச்சர்கள், ஆளுநர்… இந்த இணைப்பு சரியாக இருக்க வேண்டும். எங்கு குறை இருந்தாலும் அவற்றைச் சரிசெய்யலாம். அதிகாரிகளால் முதல்வருக்கும், எனக்கும் சங்கடங்கள் இருக்கலாம்.

அது சரிசெய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலனடைய வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் கொடுத்தது. மருத்துவச் சேர்க்கைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் அனுமதி கிடைத்தது. மருத்துவச் சேர்க்கையில் அதிகாரிகள் தவறு செய்தார்கள். புதுச்சேரியில் காலம் தாழ்ந்து செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெலங்கானாவில் கோரிக்கை வைத்திருக்கிறேன். மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம் உறுதி தந்திருக்கின்றன. சென்டாக் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். அதற்காகக் கடும் முயற்சி எடுத்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் வரையறை தந்திருக்கும் சூழலிலும், மத்திய அரசு போராடிப் பெற்றுத் தருவதாக உறுதி மொழி தந்திருக்கிறது. காலம் தாழ்ந்து மருத்துவத்தில் அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக அவர்களுக்கு உதவி செய்யப்படும். அதிகாரிகள் தவறு இழைத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தமிழிசை

அவர்கள் தவறு செய்திருக்கக் கூடாது. கண்டிப்பாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோருடன் அதிகாரிகளுக்குச் சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அவற்றைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தலைமைச் செயலரை அழைத்துப் பேசினேன். முதல்வரிடமும் பேசியிருக்கிறேன். அதிகாரிகள் தாமதம் செய்வது கவலை அளிக்கக்கூடியதாக இருந்தது. முதல்வர், அமைச்சர்களைக் கலந்தாலோசித்து சுமுக செயல் முறையாற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறேன். தமிழகத்திலும் முதல்வரும் ஆளுநரும் உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம். எப்போதும் சண்டையே போட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை. தெலங்கானாவுக்கும் இதையேதான் சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. தீவிரவாதத்துக்கு எங்கேயும் இடம் கிடையாது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.