சத்ரபதி சம்பாஜிநகர், மஹாராஷ்டிரவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வன்முறையை கட்டுப் படுத்த பீட் மாவட்டத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு, தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தை சேர்ந்த மராத்தா சமூகத்தினரை சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்காமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதை தொடர்ந்து, மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே கடந்த மாதம் 25 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கினார்.
இந்நிலையில், மனோஜ் ஜராங்கேவின் போராட்டம் குறித்து தேசியவாத காங்., – எம்.எல்.ஏ., பிரகாஷ் சோலங்கே கிண்டலாக பேசிய பேச்சு சமூக வலைதளத்தில் வெளியானது.
இதை தொடர்ந்து மராத்தா சமூகத்தினர் ஆத்திரம் அடைந்தனர்.
பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்., எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ் சோலங்கே, சந்தீப் ஷிர்சாகர் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் பீட் மாவட்டம் முழுதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
மராத்தா சமூகத்தினருக்கு ஆதரவாக, சிவசேனா கட்சியை சேர்ந்த இரண்டு எம்.பி.,க்கள், ஒரு எம்.எல்.ஏ., மற்றும் காங்., – பா.ஜ.,வில் தலா ஒரு எம்.எல்.ஏ., தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தங்கள் முதல் அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.
இதை தொடர்ந்து மராத்தா சமூகத்தினருக்கு குன்பி இன சான்றிதழ் வழங்கும் பணியை மாநில அரசு நேற்று துவங்கியது.
இது தொடர்பாக, போராட்டக்குழு தலைவர் மனோஜ் ஜராங்கே கூறுகையில், ”மஹாராஷ்டிரா முழுதும் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு முழுமையான இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்,” என்றார்.
இதற்கிடையே, மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு நடத்தும்படி பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு, மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், பீட் மாவட்டத்தில் பதற்றம் நீடிப்பதால் இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. தடை உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது.
மும்பையில் கவர்னர் மாளிகை முன், தேசியவாத காங்., சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் சிலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்