1 அடி இடத்திற்கு சண்டை வாலிபர் அடித்து கொலை
ஹெப்பகோடி: ஒரு அடி இடத்திற்காக ஏற்பட்ட சண்டையில், வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு ரூரல் ஹெப்பகோடியில் வசித்தவர் ரமேஷ், 27. இவரது மனைவி காவ்யா, 25. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மோசஸ், 40, ஜோசப், 37, ஜெகதீஷ், 35 ஆகியோருக்கும், முன்விரோதம் இருந்தது. தாங்கள் வசித்து வந்த வீட்டை இடித்து, புதிய வீட்டை ரமேஷ் கட்டி வந்தார்.
இந்நிலையில் வீடு கட்டுவதை சாக்காக வைத்து, தங்களுக்கு சொந்தமான 1 அடி இடத்தை, ஆக்கிரமித்துக் கொண்டதாக ரமேஷுடம், பக்கத்து வீட்டினர் தினமும் தகராறு செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், மூன்று பேரும் சேர்ந்து, ரமேஷை பிடித்து சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார். ஜோசப் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும், ஹெப்பகோடி போலீசார் தேடுகின்றனர்.
வரதட்சணை கொடுமை புதுப்பெண் தற்கொலை
மங்களூரு: தட்சிண கன்னடாவின் பன்ட்வால் சஜிபமுடாவைச் சேர்ந்தவர் பாவா. இவரது மகள் நவுசின், 22. இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக மங்களூரு உல்லாளை சேர்ந்த அஸ்மான், 24, என்பவரின், அறிமுகம் கிடைத்தது. இருவரும் காதலித்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர்.
திருமணத்தின்போது, நவுசின் பெற்றோர் 180 கிராம் நகைகளை, வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அஸ்மானுக்கு நிறைய கடன் இருந்ததால், நவுசின் வீட்டில் இருந்து வரதட்சணையாக கொடுத்த, நகைகளை விற்றுள்ளார். அதன் பின்னர் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி நவுசினுக்கு, அஸ்மான், மாமியார் ஜூபைதா, மைத்துனி அஸ்மியா ஆகியோர், தினமும் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் நவுசின், கடந்த மாதம் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். தினமும் மொபைல் போனில் பேசி, வரதட்சணை வாங்கி வரும்படி கணவரும், அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்துள்ளனர்.
மனம் உடைந்த நவுசின் நேற்று முன்தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை பாவா அளித்த புகாரில், கணவர், மாமியார், மைத்துனி மீது பன்ட்வால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாமனாரை கொன்று மருமகன் தற்கொலை
கலபுரகி : மாமனாரை கல்லால் அடித்துக் கொன்ற மருமகன், மின்கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கலபுரகியின் சிஞ்சோலி சிந்தப்பள்ளி கிராமத்தில் வசித்தவர் எரண்ணா, 70. தன் மகள் அம்பிகாவை மஹாராஷ்டிராவின் உமர்காவைச் சேர்ந்த ராஜு, 30, என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். கணவன், மனைவி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
கணவருடன் கோபித்துக் கொண்டு, சில நாட்களுக்கு முன்பு, தந்தை வீட்டிற்கு அம்பிகா வந்திருந்தார். நேற்று காலை அம்பிகாவை அழைத்துச் செல்ல, ராஜு வந்தார். “மகளுடன் சண்டை போட வேண்டாம்,” என, ராஜுவுக்கு எரண்ணா அறிவுரை கூறினார்.
இதை ஏற்க ராஜு மறுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில், மாமனாரைக் கல்லால் அடித்து, ராஜு கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பியவர், கிராமத்தில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பியைப் பிடித்தார். அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரும் உயிரிழந்தார்.
சுலேபேட் போலீசார் நடத்திய விசாரணையில், மாமனாரைக் கொலை செய்த ராஜு, போலீசுக்கு பயந்து தற்கொலை செய்தது தெரிந்தது.
திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது ரூ.71 லட்சம் நகைகள் மீட்பு
புட்டேனஹள்ளி : பெங்களூரில் திருட்டு வழக்குகளில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டன.
பெங்களூரு புட்டேனஹள்ளி போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். சந்தேகம்படும்படி சாலையில் சுற்றிய, இருவரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பெயர்கள் கணேஷ், 40, ரகு, 37, என்பதும், இரவில் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து, திருடி வந்ததும் தெரிந்தது.
இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 735 கிராம் தங்கநகைகள்; 454 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.
இதுபோல மல்லேஸ்வரம் போலீசார், திருட்டு வழக்குகளில் தப்ரேஸ் என்ற ஜபியுதீன், 28, மெஹ்தாப், 25 ஆகியோரை, கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 503 கிராம் எடையுள்ள, 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை, போலீசார் மீட்டனர்.
பிரணவ் ஜுவல்லரி மோசடி ஈரோட்டில் 295 புகார்கள்
ஈரோடு : ஈரோட்டில் காவிரி சாலையில் திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி மூடப்பட்டது. பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பெற்ற பணத்தை தராமல் ஏமாற்றியது. இங்கு கடந்த மாதம், 19ம் தேதி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து, சீல் வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:
பிரணவ் ஜுவல்லரி மோசடி குறித்து, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு, 100 புகார், எஸ்.பி., அலுவலகம் வாயிலாக, 195 புகார் என, 295 புகார்கள் இதுவரை வந்துள்ளன. மூன்றரை கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
புகார்கள் ஓரிரு நாளில் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படும். இனி, பிரணவ் ஜுவல்லரி மோசடி புகார்களை, அசல் மற்றும் நகல் சான்றுகளுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் தான், மக்கள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
அ.தி.மு.க., நிர்வாகி வெட்டி கொலை: உறவினர் கைது
திருநெல்வேலி,: திருநெல்வேலி அருகே அ.தி.மு.க., கிளை செயலாளரை வெட்டிக் கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் கொங்கந்தான்பாறையைச் சேர்ந்தவர் ஜெயசிங் மரியராஜ் 55. கட்டட கான்ட்ராக்டர். அ.தி.மு.க., கிளை செயலாளர். நேற்று முன்தினம் உறவினர் ஒருவர் இறந்ததால் கல்லறைக்கு குழி தோண்டும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர் தாஸ் 29, அவருடன் தகராறில் ஈடுபட்டார். பின் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.
ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரியராஜ் இரவு இறந்தார். தாைஸ முன்னீர் பள்ளம் போலீசார் கைது செய்தனர். இறந்த ஜெயசிங் மரியராஜ் மேலாளராக பணிபுரிந்த நிறுவனத்தில் தான் டிரைவராக பணிபுரிந்ததாகவும், தம்மை அவர் அடிக்கடி அவதூறாக பேசியதால் கொலை செய்ததாகவும் தாஸ் போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை மணிப்பூரில் மர்ம நபர்கள் வெறி
இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே இடஒதுக்கீடு தொடர்பாக பெரும் கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியான நிலையில், சமீப காலமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், நம் அண்டை நாடான மியான்மர் எல்லைக்கு அருகே உள்ள மோரே நகரில், எல்லை பாதுகாப்பு படைக்காக ஹெலிகாப்டர்கள் தரையிறங்க ஏதுவாக ஹெலிபேட் வசதி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணியை மேற்பார்வையிட, மணிப்பூர் காவல்துறையின் சப் – டிவிஷனல் போலீஸ் அதிகாரி சிங்தம் ஆனந்த் சென்றார்.
அப்போது, மர்ம நபர்கள் சிலர், இவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடினர். இதில், படுகாயமடைந்த அவர், மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசாருக்கு, மியான்மர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பினர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்