Bigg Boss 7 Day 30: `நீ அவனை லவ் பண்ணு!' – பிரதீப் தந்த பகீர் ஐடியா; அவர் விளையாடுவது சரியா?

பிரதீப்பின் ராஜதந்திர ஸ்ட்ராட்டஜியை சக போட்டியாளர்கள் உணர்ந்து மெல்ல அதை உடைக்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான மாற்றம்.

பிரதீப் ஒரு சிறந்த ஆட்டக்காரராக முதலிடத்தில் இருந்தாலும், அவர் செய்யும் மிகையான அராஜகம்தான் சமயங்களில் எதிரியாக வந்து நின்று விடுகிறது. (வாய்.. வாய்.. வாய் மட்டும் இல்லேன்னா. நாய் தூக்கிட்டுப் போயிடும் என்கிற வசனம் பலருக்கும் நினைவுக்கு வரலாம்.).

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

“I am not feeling okay … பிக் பாஸ். என்னை கன்பெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க.. இந்த ஆட்டத்தை கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு விளையாடுங்க” என்றெல்லாம் அர்ச்சனாவின் அனத்தல் பஞ்சாயத்து தொடர்ந்து கொண்டிருந்தது. இதே போல் அவர் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் ‘அழுமூஞ்சி அர்ச்சனா’ என்று யாராவது பட்டம் தந்து விடலாம். “இந்த கேமே ஒருத்தரை அழுத்தி வெளியே அனுப்புறதுதான்.. அதுக்குத்தானே நாமினேட் செய்கிறோம்” என்று தன் தரப்பு அராஜக நியாயத்தை சொல்லி அர்ச்சனாவை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார் பிரதீப்.

அர்ச்சனா

“வீக்கா இருக்கிறவங்களை பேக் பண்ணி வெளியே அனுப்ப வேண்டியதுதான்… இங்க படுக்கறதுக்கும் இடமில்லை… தட்டி தூக்கிட வேண்டியதுதான்” என்று கானா பாலா சொன்னதும் பெரிய வீட்டு போட்டியாளர்கள் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றார்கள். கானா பாலா சேஃப் கேம் ஆடுகிறாரா அல்லது இருக்கிற நடைமுறை நியாயத்தைச் சொல்கிறாரா?. அனுபவம் உள்ள வழக்கறிஞர் என்பதால் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்திருப்பார். கானா பாடகர் என்பதால் இளைஞர்களுடன் தினமும் பழகுகிற சூழ்நிலையில் இருக்கிறார். எனவே பிக் பாஸ் வீட்டில் அவரால் உடனே இணக்கமாகப் பொருந்திக்கொள்ள முடிகிறது.

பிரதீப் – மாயா

ஆனால் அர்ச்சனாவோ ஒருவேளை வீட்டுக்குள் பொத்தி வளர்க்கப்பட்ட கூண்டுப் பறவையாக இருக்கலாம். அதனால்தான் கூண்டை திறந்து விட்டதும் வெளி உலகத்தை பார்த்து மிரள்கிறார் என்று தோன்றுகிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்களாகவே பிரச்னைகளை எதிர்கொள்வதுபோல் களத்தில் இறக்கி விடுவது, குழந்தை வளர்ப்பில் முக்கியமான விஷயம். வெளிச்சம் படாமல் அதிகம் பொத்தி வைத்து வளர்க்கிற வீட்டுச் செடி சீக்கிரம் பட்டுப்போகும். பிறகு கானா பாலா பாடிய பாடலை மக்கள் உற்சாகமாக கைத்தட்டிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

எக்ஸ்ட்ரா சட்னி கொடுத்து மாயாவை கவனம் ஈர்த்த தினேஷ்

மதுவை எதிர்த்து எத்தனையோ போராட்டங்களை நிகழ்த்திய தேசம் இது. ‘ஓப்பன் த டாஸ்க்குமாக்கு’ என்கிற கருத்துள்ள பாடலுடன் நாள் 30 விடிந்தது. “அர்ச்சனா அழுது சீன் போட்டு எல்லா காமிராவையும் அவங்க பக்கம் திருப்பிட்டாங்க. படம் பெரிய ஹிட்டு. பெரிய வீடு சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டாங்க” என்று அர்ச்சனாவின் அழுகாச்சி பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார் விஷ்ணு.

மாயா

‘நேற்று பார்த்த அர்ச்சனாவா இது?’ என்று ஆச்சரியப்படும் படியாக தலைகீழாக மாறி இருந்தார், இன்றைய காலையின் புது அர்ச்சனா. “என்ன காலைல எனர்ஜியா இருக்கீங்க?” என்று மாயா தானாக முன் வந்து பேச்சுக் கொடுத்தது சிறப்பான விஷயம். “அது அப்படித்தான். இப்ப மூடு மாறிடுச்சு. நேத்து உங்களை ஹர்ட் பண்ணதற்கு ஸாரி” என்று அர்ச்சனா சொல்ல, “அப்படி எல்லாம் யாரும் என்னை ஹா்ட் பண்ணிட முடியாது” என்று கெத்தாக சொன்னார் மாயா. ஒரு வகையில் ஆண் பிரதீப் என்று மாயாவைச் சொல்லலாம்.

கானா பாலா

பெரிய வீட்டிற்கு சாதகமாகப் பேசி கைத்தட்டு வாங்குகிற கானா பாலாவின் ஸ்ட்ராட்டஜி ஒரு மாதிரியாக இருக்கிறது என்றால், ஆரம்பத்தில் சண்டைக்கோழியாக தலையைச் சிலிர்ப்பி அலப்பறையைக் கொடுத்த தினேஷின் உத்தி இப்போது இன்னொரு மாதிரியாக இருக்கிறது. மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு எக்ஸ்ட்ரா சட்னி தந்து ‘வாங்க பழகலாம்..’ என்கிற அழைப்பை மறைமுகமாகத் தருகிறார். அதிகாரம் உள்ளவரிடம் இணக்கமாக சென்று விடுவதும் ஒரு நல்ல உத்திதான். மாயாவையும் தினேஷையும் இணைத்து வைத்து பூர்ணிமா கிண்டல் அடிக்க “அப்படியெல்லாம் கிடையாது. அவர் என் சித்தப்பா மாதிரி” என்று ரொமான்ஸ் ஏரியா கதவை உடனே சாத்தினார் மாயா.

`அக்ஷயா.. நீ பிராவோவை லவ் பண்ணு’ – பிரதீப்பின் அட்ராசிட்டி

பிரதீப் அடுத்தக் கட்ட ராஜதந்திர நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். “சின்ன வீட்டில இருக்கிறவங்களை ஆளுக்கு ஒருத்தரா பிளான் பண்ணி டார்கெட் பண்ணுவோம். தினேஷை யாருமே கண்டுக்காதீங்க. தனியா சுத்தட்டும். அவன் பயந்துட்டான். எனக்கும் மாயாவுக்கும் சொம்பு தூக்குறான்..” என்றெல்லாம் ஐசுவிடம் சொல்லிக் கொண்டிருந்த பிரதீப், ‘பிராவோவை அக்ஷயா லவ் பண்ணட்டும்’ என்கிற மாதிரி விபரீதமான ஐடியாக்களையும் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘தோத்தவங்க துடைக்கணும்’ மற்றும் கழுவப் போறது யாரு’ ஆகிய இரண்டு டாஸ்க்குகளிலும் பெரிய வீடுதான் வெற்றி பெற்றது. எனவே சின்ன வீட்டுக்கு பணிச்சுமை கூடுதலாகும்.

‘நான்தான் இந்த கேமை சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறேன்… என்னால்தான் ஸ்ட்ராட்டஜிகளை புத்திசாலித்தனமாக யோசிக்க முடியும்… நான்தான் முதலிடத்திற்கு தகுதியானவன் என்பது போன்ற எண்ண விதைகளை வந்த முதல் நாளில் இருந்தே திட்டமிட்டு தூவிக் கொண்டு இருக்கிறார் பிரதீப். இப்போது அது வளர்ந்து பெரிய மரமாக ஆகி இருக்கிறது.

இது ஒரு வகையில் ‘பாபநாசம் திரைப்பட சுயம்புலிங்கத்தின்’ உத்தி. தான் விரும்புவதை மற்றவர்களின் வாயால் சொல்ல வைப்பது. இத்தனை நாள் பிரதீப்பை பிரமிப்பாகவும் எரிச்சலாகவும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இப்போதுதான் இந்த உத்தியை உடைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். “பிரதீப் நமக்காக பிளான் பண்றது மாதிரி சொல்றான் ஆனால் அவன் நம்பளையும் துரத்திடுவான். அதுக்காகத்தான் மத்தவங்க மண்டையைக் கழுவுறான்” என்று விஷ்ணு சொல்வது ஒரு வகையில் சரி. “நம்ப சப்கான்சியஸ்ல அவர் மைண்டை ஏத்திட்டாரு. இதில் நாம ஏமாறக்கூடாது” என்று இதையே இன்னொரு பக்கம் நிக்சனும் ஐஷூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (சரிப்பா.. தம்பி. மொதல்ல நீ தள்ளி உக்காரு!)

அக்ஷயா – பிராவோ

“உனக்குன்னு ஒரு தனி ஐடென்டிட்டி, கன்டென்ட் வேணும்ல. நீ பிராவோ பக்கம் போய் லவ் ட்ராக் தூண்டிலைப் போடு. ரிஸ்க் எடுக்காமல் இங்க ரஸ்க் சாப்பிட முடியாது. நான் ஆடற கேம்ல எனக்கு கூட கெட்ட பேர் வரலாம். என்ன பண்றது? சர்வைவல் முக்கியம் குமாரு” என்பது போல் அக்ஷயாவிற்கு ஐடியா தந்து கொண்டிருந்தார் பிரதீப். “அய்யோ.. இதெல்லாம் எனக்கு சரியா வராது” என்று அக்ஷயா முதலில் சிணுங்கினாலும், பிறகு பிராவோவிடம் பிரியமாக பேச்சுக் கொடுத்து காபி கேட்க “லைட்டா வேணுமா.. ஸ்ட்ராங்கா வேணுமா.. இல்ல ரெண்டும் கலந்து வேணுமா?” என்று டீக்கடை மாஸ்டர் மாதிரி கேட்டு ஆரம்பத்திலேயே விழுந்துவிட்டார் பிராவோ.

அக்ஷயா

“என்ன சொல்றான் அவன்?” என்று பிறகு பிரதீப் விசாரிக்க, “எனக்காக காபி ராகத்துல கச்சேரி பண்ணக் கூடத் தயாரா இருக்காரு” என்று டார்கெட்டை வீழ்த்திய பெருமித வெட்கத்துடன் சொன்னார் அக்ஷயா. (பொண்ணு பொழச்சிக்கும்.!)

‘மணியோசை கேட்டு எழுந்து…’

‘அசைஞ்சா போச்சு’ என்கிற கோல்டன் ஸ்டாருக்கான டாஸ்க்கை அடுத்து ஆரம்பித்தார் பிக் பாஸ். காண்டா மிருகத்தின் ஒற்றைக் கொம்பு போல ஒன்று போட்டியாளர்களின் தலையில் மாட்டப்படும். கொம்பின் நுனியில் ஒரு மணி இருக்கும். பஸ்ஸர் அடித்தவுடன் மணியின் சத்தம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மணி அடித்து சத்தம் வந்து விட்டால் அவர் அவுட். இப்படி அவுட் ஆனவர்கள், மற்றவர்களைத் தொடாமல் தொந்தரவு செய்து அவர்களை அவுட் ஆக்க முயற்சிக்கலாம்.

ஆட்டம் ஆரம்பித்தது. முதல் சுற்றில் சிரிப்பு தாங்காமல் அசைந்து மணி சத்தம் ஏற்படுத்தி வெளியேறினார் மாயா. அடுத்ததாக ‘போர் அடிக்குது’ என்கிற அற்பமான காரணத்தைச் சொல்லி தானாக வெளியேறினார் நிக்சன். சுரேஷின் மணி அடித்ததாகச் சொல்லி அவரையும் அவுட் ஆக்கினார்கள். ஆனால் இதை மறுத்து ஆட்சேபம் செய்துகொண்டிருந்தார் சுரேஷ். “நீங்க சொன்னா ஆச்சா.. அப்படின்னா.. நானும் எல்லோரோட மணியும் அடிச்சதுன்னு சொல்லிடுவேன்” என்பது அவரது முரட்டு வாதம்.

இப்படியாக வீடே பரபரப்பாக மணியாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் போது ஒரு ஜோடி மட்டும் பாத்ரூம் ஏரியாவில் அமைதியாக பதுங்கிக் கொண்டிருந்தது. அது விக்ரம் மற்றும் அக்ஷயா. “பெல் சத்தம் கேட்டா, ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்க வேணாம்.. ஓகேவா?” என்று அழுகுணி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தார் விக்ரம். (கேமரா இருக்கிறதை மறந்துட்டீங்களா பாஸூ?!) பிறகு மற்றவர்கள் கண்களின் படாமல் ஒரு ஸ்கிரீனின் பின்னால் இவர்கள் ஒன்றாக மறைந்தார்கள். (என்னடா நடக்குது இங்க?!)

“பிரதீப்போட மணி ஆடுது.. நிச்சயம் சத்தம் வந்திருக்கும். அவன் தனியா இருக்கிறதால யாருக்கும் தெரியாது” என்று தூரத்தில் நின்று ஆட்சேபம் சொன்ன சுரேஷ், இதைச் சொல்வதற்காக பிரதீப்பை நெருங்க, “நான் நேர்மையா ஆடிட்டு இருக்கேன். வேற எங்கேயாவது போய் உன் விளையாட்டைக் காமி” என்று எரிச்சலானார் பிரதீப்.

பிரதீப் பேசிய ‘பீப்’ வார்த்தைகள்

‘இந்த ரவுண்டில் யார் யாரெல்லாம் அவுட் என்று சொல்லுங்க’ என்று பிக் பாஸ் கேட்டார். ‘எந்த ஒரு போட்டியின் முடிவையும் சக போட்டியாளர்கள்தான் சொல்ல வேண்டும்’ என்பது இந்த ஆட்டத்தில் உள்ள ஒரு சூட்சுமம். அப்பொழுதுதான் போட்டியாளர்களுக்குள் விரோதம் ஏற்பட்டு சண்டையும் சர்ச்சையும் வெற்றிகரமாக ஏற்படும். பிக் பாஸ் இதை அறிவித்தால் சுவாரஸ்யம் இருக்காது. போட்டியாளர்கள் அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள்.

இந்தச் சுற்றில் தோற்றவர்களின் வரிசையில் பிரதீப்பின் பெயரையும் சுரேஷ் சேர்த்த போது, பிரதீப் இதை கடுமையாக ஆட்சேபித்தார். அப்பொழுது அவரின் வாயில் தன்னிச்சையாக ஒரு பீப் வார்த்தை வந்ததை உணர்ந்த அடுத்த கணமே வாயில் அடித்துக் கொண்டார். சபையில் கெட்ட வார்த்தை சொன்னதால் விஷ்ணுவிற்கு கோபம் வர, பிரதீப்பை ஆட்சேபித்தார். “அப்படித்தான் பேசுவேன்” என்று தன் வழக்கமான பாணியில் சொல்லி கூடுதலான எரிச்சலை ஏற்படுத்தினார் பிரதீப். “ஒருவேளை என்னை அவுட்டுன்னு சொன்னீங்கன்னா மத்தவங்க விளையாடும் போது மூஞ்சில மிளகாய்ப் பொடி ஊதுவேன்” என்று டெரராகப் பேசினார் பிரதீப். செய்யக்கூடிய ஆசாமிதான்.

பிரதீப்

திடீரென்று உரத்த குரலில் கத்தி கவன ஈர்ப்பு செய்வது சுரேஷின் கோணங்கித்தனமான பாணிகளில் ஒன்று. எனவே இந்த முறையும் அதையே செய்ய உத்தேசித்து “அய்யய்யோ.. எனக்கு இங்க விளையாட பயமா இருக்கு.. மிளகாய் பொடி ஊதுவேன்னு சொல்றாங்க. இனி என்னால இங்க இருக்க முடியாது” என்று பைகளைத் தூக்கிக் கொண்டு வாசலை நோக்கி ஓடி சீன் போட ஆரம்பித்தார். “நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று குறும்பு செய்தார் மாயா. ‘பார்த்துப்பா. நெஜம்மாவே கேட்டை திறந்து விட்றப் போறாங்க’ என்று யாரோ கிண்டல் செய்தார்கள். பிக் பாஸ் அப்படிச் செய்யக்கூடிய கோக்குமாக்கு ஆசாமிதான்.

சுரேஷ்

பிரதீப் பல அராஜகமான கொனஷ்டைகளை செய்பவர்தான் என்றாலும் பிக் பாஸ் விதிகளை மிகவும் சின்சியராக பின்பற்றுவதில் முதன்மையானவர். அப்படி தன்னை காட்டிக் கொள்வதிலும் ஊக்கமாக இருப்பவர். எனவே ‘பிரதீப் அவுட்’ என்று சுரேஷ் விளையாட்டுத்தனமாக சொன்னது அவருக்கு பயங்கர எரிச்சலை ஏற்படுத்திருக்கலாம். அதை மறுப்பது பிரதீப்பிற்கு உள்ள உரிமை. ஆனால் கெட்ட வார்த்தை பேசுவதும் மற்றவர்களை அச்சுறுத்துவது போல் நடந்து கொள்வதும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது. “நீங்க நல்ல ஆடறீங்க. ஆனா சமயத்துல யோசிக்காமல் வார்த்தைகளை விட்டுடறீங்க” என்று கமலும் ஏற்கெனவே எச்சரிக்கை தந்திருக்கிறார். “நான் நேர்மையா ஆடிட்டு இருக்கேன் என்னோட மணி அடிக்கவே இல்லை” என்று விசித்ராவிடம் அனத்திக் கொண்டிருந்தார் பிரதீப்.

‘நான் வெளியே போறேன்’ – சுரேஷின் ஒவர் டிராமா

“ஏன் யாருமே அவனை கண்டிக்க மாட்றீங்க… அவனுக்கு பயப்படுறீங்களா? நீங்க எவ்வளவு திட்டினாலும் பதிலுக்கு நான் ஒருமுறையாவது திட்டியிருக்கேனா… நான் ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலே இங்கே ஆட்சேபிக்கறாங்க. நான் விளையாட விரும்பலைப்பா” என்று பிரதீப்புக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டிக் கொண்டிருந்தார் சுரேஷ். அவர் சொல்வது ஒரு வகையில் நியாயம்தான் என்றாலும் எல்லாவற்றிற்கும் சுரேஷ் மிகையான டிராமாவை செய்தால் உண்மையாகவே அவர் வருந்தும் போது கூட ‘சீன் போடுகிறாரோ’ என்று மக்கள் கருதி விடும் ஆபத்து இருக்கிறது.

மாயா – சுரேஷ்

“நீ என்னை ஏமாத்திட்ட.. துரோகம் பண்ணிட்ட.. உன்ன போய் அண்ணனா நெனச்சேன் பாரு… என்னைத்தான் செருப்பால் அடிச்சிக்கணும்.. நீ வீட்டை விட்டு வெளியே போயிடு. இல்லைன்னா அசிங்கப்பட்டு போவ” என்றெல்லாம் சுரேஷை நோக்கி கண் கலங்க சொல்லிக் கொண்டிருந்தார் பிரதீப். இந்த வகையில் ஆனானப்பட்ட பிரதீப்பையே கலங்க வைத்த பெருமை சுரேஷிற்கு சேரும். ‘எல்லா மனுஷனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் இருக்கும்’ என்பது குருதிப்புனல் திரைப்படத்தில் வரும் வசனம். நேர்மையாக விளையாடிய தன் மீது பொய் சொல்லி அவுட் ஆக்கியதால் பிரதீப் கோபமும் வருத்தமும் அடைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

விஷ்ணு

ஆட்டம் தொடர்ந்தது. தலைக்குப் பின்னால் இன்னொரு மணியை அடித்து ‘உங்க மணி அடிச்ச சத்தம் வந்துடுச்சு. நீங்க அவுட்’ என்று ஒரு திறமையான ட்ராமாவை மணி செய்தது சுவாரசியம். பெயரிலேயே மணி இருப்பதால் இந்த ஐடியா வந்தது போல. இந்த டாஸ்க்கின் கடைசியில் அவுட் ஆனது விசித்ரா. எனவே அவருக்குத்தான் வெற்றி. கோல்ட் ஸ்டார் அவருக்குத்தான். அம்மணியின் முகத்தில் பயங்கர மகிழ்ச்சி. ‘இந்த ஆட்டத்தில் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்’ என்கிற பூரிப்பு அவரிடம் தெரிந்தது. அம்மா கேரக்டர்களை பிக் பாஸ் வீடு எப்போதுமே விரைவில் பலி கொடுக்கும். ஆனால் அதை முறியடித்து விசித்ரா முன்னேறிக் கொண்டிருப்பது நன்று.

“இந்த ஸ்டாரை நான் உங்களுக்கு வாங்கித் தருகிறேன். பதிலுக்கு நீங்க என்ன செய்வீங்க?” என்று இன்றைய காலையில்தான் விசித்திராவிடம் பிரதீப் டீல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது லுலுவாய்க்கு பிரதீப் அடித்து விட்டிருக்கலாம். ஆனால் இப்பொழுது உண்மையாகவே அது நடந்துவிட்டது.

கார்டன் ஏரியாவில் சுரேஷிற்கும் பிரதீப்பிற்குமான மோதல் மீண்டும் உக்கிரமாக தொடர்ந்தது. “நீ வெளியே போடா.. சில்ற பயலே… செருப்பால அடிப்பேன்… அடிடா பாக்கலாம்..” என்றெல்லாம் பரஸ்பரம் வசைகளை பரிமாறிக் கொண்டார்கள். ‘பிக் பாஸ் நான் வெளில போறேன்’ என்கிற ஆலாபனையை மறுபடியும் ஆரம்பித்தார் சுரேஷ்.

விசித்ரா

“ஒவ்வொரு முறையும் தப்பு பண்ணிட்டு ஸாரி சொல்ல முடியாது பிரதீப்” என்று ஜோவிகா எச்சரிக்க “இந்த முறை ஸாரில்லாம் கேட்க மாட்டேன்” என்று அழும்பு செய்தார் பிரதீப். ‘உனக்குத்தான் கெட்ட வார்த்தை பேசத் தெரியுமா.. எனக்கும் பேசத் தெரியும். உன் கெட்ட வார்த்தைக்கும். என் கெட்ட வார்த்தைக்கு சோடி போட்டுக்குவமா.. சோடி’ என்று தன் பங்கிற்கு விஷ்ணுவும் ஆட்சேப வார்த்தைகளை எடுத்து விட, மியூட் போட்டு அதை மழுப்பியது பிக் பாஸ் டீம்.

ஆக இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸிற்குத்தான் வெற்றி. கன்டென்களை அள்ளி அள்ளி அவருடைய கையே வலித்திருக்கும். எத்தனை சீசன் நடந்தாலும் இறுதியில் வெல்வது பிக் பாஸ்தான். நாளை இவருடைய அலப்பறை என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரதீப்பின் ஆட்டம் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.