ஊழலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எதிராக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்காமையினால் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சின் பலவீனமான நிர்வாகம் குறித்து கோபா உபகுழு கடும் விசனம்
• தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை உபகரண மோசடியில் சிக்கிய அதிகாரி 10 வருடங்களாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்
• வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவது குறித்து உரிய கண்காணிப்பு முறை (Cross check) இல்லாமை பாரிய பிரச்சினை – சகல வைத்தியசாலைகளிலும் விரைவில் உரிய நிர்வாக நடைமுறையொன்றை செயற்படுத்தப் பரிந்துரை
கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வில் புலப்பட்ட விடயத்துக்கு அமைய ஊழல் மோசடியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் கௌரவ பிரதீப் உந்துகொட தலைமையில் அண்மையில் (25) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) நியமிக்கப்பட்ட உப குழுவில் கடும் விசனம் வெளியிடப்பட்டது.
இத்துறையில் ஊழல் முறைகேடுகள் மேலும் இடம்பெற்று வருவதால் இது சிலரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஒரு சிலரின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த தொழில் கௌரவம் பாதிக்கப்படுவதால், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உப குழு வலியுறுத்தியது.
2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்காய்வொன்றில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தின் மேற்கூரையில் சத்திரசிகிச்சைப் பொருட்களை மறைத்து வைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பணியாளர் ஒருவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை பற்றி குழு கவனத்தில் எடுத்தபோது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில் தேசிய வைத்தியசாலையினால் நியமிக்கப்பட்ட குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு அமைய குற்றஞ்சாட்டப்பட்ட பணியாளுக்கு பணி இடைநிறுது்தம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய பணியாளர் ஒருவரை பணியிடைநிறுத்தம் செய்வது காலதாமதம் அடைவது, இச்சம்பவம் இடம்பெற்ற உடன் இருப்புக்களுக்கான புத்தகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை என்பன பிரச்சினைக்குரிய விடயங்கள் என கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த நிலைமையின் காரணமாக விசாரணையின் போது அல்லது நீதிமன்றத்தின் போது அவர்கள் குற்றமற்றவர்களாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும், ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க இது தடையாக இருப்பதாகவும் கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இந்தப் பணியாளர் 10 ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகளை செய்துள்ளார் என்பதும் தெரியவந்ததுடன், நிர்வாகத்தில் காணப்படும் பலவீனமே இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்தன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கு முறையான கண்காணிப்பு அமைப்பு (Cross check) செயற்படாததன் காரணமாகவே இவ்வாறான நீண்டகால மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய உப குழு, முறையான முகாமைத்துவ முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகள் மற்ற மருத்துவமனைகளில் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தியது.
இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உயர் மட்ட தாதியர்கள் குறித்தும் ஒழுக்காற்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை விரைவில் முன்னெடுப்பது குறித்தும் குழு வலியுறுத்தியது.
இதற்கு அமைய சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை அமைத்து இந்த மோசடி தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உபகுழு பணிப்புரை வழங்கியது.
இந்த கோபா உபகுழு சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை குழு முன்னிலையில் அழைத்திருந்ததுடன், 2019/2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான வைத்தியசாலை முகாமைத்துவம் குறித்த கணக்காய்வு விசாரணை குறித்து ஆராய்ந்திருந்தது.
சுகாதார அமைச்சின் கணக்குகள் தொடர்பான கணினி அமைப்பில் பெருமளவிலான காணாமற்போன சொத்துக்கள் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்கு முன்னரும் இது தொடர்பான கணக்காய்வு விசாரணையில் பரிந்துரைகள் இருந்ததால், கணக்கியல் அமைப்பில் நிதி அல்லாத சொத்துக்களை துல்லியமாக புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான முன்னேற்றம் குறித்து குழுவிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.
குருநாகல், அனுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை குத்தகைக்கு விடுவது, மாத்தறை பொது வைத்தியசாலையின் துப்புரவு சேவையைப் பெற்றுக் கொள்வது, வைத்தியசாலை மருத்துவக் கழிவுகளை அகற்றுவது போன்றவற்றில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் முறைகேடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.