புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக தன் மீது எழுந்துள்ள புகாரில், மக்களவை நெறிமுறைக்குழுவின் நாளைய விசாரணையில் ஹிராநந்தானி, ஜெய் ஆனந்த் தேஹத்ராவிடம் குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாக மஹுவா மொய்த்ரா எம்.பி. தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளார் எனப் புகார் எழுந்தது. இப்புகார் தொடர்பாக மக்களவை நெறிமுறைக் குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழு முன்பாக, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் அக்.23-ம் தேதி நேரில் ஆஜராகி, மொய்த்ராவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து அக்டோபர் 31-ம் தேதி விசாரணைக்கு வருமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நெறிமுறைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு நவ.5 ம் தேதி வரை கூடுதல் அவகாசம் கேட்டு மஹுவா பதில் அனுப்பியிருந்தார். இந்தக் கோரிக்கையை நிராகரித்த நெறிமுறைக்குழு நவ.2ம் (நாளை) நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியது. இந்தநிலையில் நாளை குழு விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னதாக நெறிமுறைக் குழுவுக்கு மஹுவா இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளார். இரண்டு பக்கம் உள்ள அக்கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அப்பதிவில், எனக்கு அனுப்பும் சம்மன்களை ஊகடகங்ளுக்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும் என மக்களவை நெறிமுறைக்குழு கருதுவதால், நாளை விசாரணைக்கு முன்பாக அக்குழுவுக்கு நான் எழுதிய கடிதத்தை வெளியிடுவது முக்கியமானது என நான் கருதுகிறன் எனக் கூறி கடிதத்தைப் பகிர்ந்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர், “என் மீது குற்றஞ்சாட்டியுள்ள தொழிலதிபர் ஹிராநந்தானி மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ரா ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை மீண்டும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தக் கோரிக்யை விசாரணைக்குழு ஏற்கிறதா இல்லையா என்பதை எழுத்துபூர்வமாக ஆவணமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் நான் குழுவிடம் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு குற்றவியல் அதிகார வரம்பு இல்லை. அது போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரமும் இல்லை. சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்கள் மட்டுமே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும். நாடாளுமன்றத்தில் மிருகபலத்துடன் சலுகைகளை அனுபவிப்பவர்கள், மக்களவை நெறிமுறைக் குழுக்களை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நமது தேசத்தை உருவாக்கியவர்கள் இவ்வாறு ஒரு தடையை வைத்துள்ளனர் என்பதை உங்களுக்கு மரியாதையுடன் நினைவு படுத்த விரும்புகிறேன்.
நெறிமுறைக்குழு எந்த ஒரு துறையிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளை நம்பியிருந்தாலும் அதன் நகலைத் எனக்குத் தரவேண்டும், அந்தத் துறையினை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் முன்னதாகவே ஒப்புக்கொண்ட துர்கா பூஜை நிகழ்ச்சிகளை காரணம் காட்டி, தான் நவ.5ம் தேதிக்கு பின்னர் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது என்றும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் டானிஷ் அலியை தகாத வார்த்தைகளில் பேசிய பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரிக்கு நாடாளுமன்ற உரிமை மீறல் குழு அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. அதற்கு ராஜஸ்தான் தேர்தல் கூட்டங்கள் காரணமாக அவரது வேண்டுகோளின் பெயரில் பின்னர் ஒரு தேதியில் ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டது என்றும் மஹுவா கூறியுள்ளார்.
இச்செயலை இரட்டை நிலைப்பாடு என்று கூறியுள்ள மொய்த்ரா, பிதுரி உதாரணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதுபோன்ற செயல்கள் விசாரணைக் குழுக்கள் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்துவதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.