பெங்களூரில் பரபரப்பான புலகேசி நகர் சாலையில், பகிரங்கமாக நடந்த கொலை, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் 18-ம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் ஒரு ஸ்கார்பியோ கார், ஒருவரைத் துரத்துகிறது. அந்த நபர் தன் உயிரைக் காப்பற்ற, தொடர்ந்து ஓடுகிறார். விடாமல் துரத்திய கார் வேகமாக மோதி, அவர்மீது ஏறிச்சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அந்த கார் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டது. இதை அந்தப் பகுதியிலிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, இறந்தவரின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. மேலும், இது தொடர்பான விசாரணையையும் தொடங்கியது. இதற்கிடையில், இந்த வழக்கில் அம்ரீன் என்பவர் உட்பட மூவரைக் காவல்துறை கைதுசெய்தது.
இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய காவல்துறை தரப்பு, “உயிரிழந்தவர் பெயர் அஸ்கர். அவர் ஒரு செகண்ட் ஹேண்ட் கார் டீலராக இருந்திருக்கிறார். இவருடன் வணிகத்தொடர்பில் இருந்தவர்கள்தான் குற்றம்சாட்டப்பட்ட அம்ரீன் குழு.
அம்ரீன், அஸ்கரிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். ஆனால், பணம் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் மத்தியில் தகராறு இருந்திருக்கிறது. அது ஒருகட்டத்தில் சண்டையாக மாறியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அஸ்கர் ஜே.சி.நகர் காவல் நிலையத்தில் அம்ரீன்மீது புகார் பதிவுசெய்தார். இந்தப் புகாரைத் திரும்பப் பெறுமாறு அம்ரீன், அஸ்கரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு அஸ்கர் மறுத்துவிட்டதால், அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
கொலை நடந்த அன்று இரவு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அஸ்கரை அழைத்திருக்கிறார்கள். அவர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், அவர்மீது காரை ஏற்றிக் கொலைசெய்யத் துரத்தியிருக்கிறார்கள். அவர் அங்கிருந்து தப்பி வந்த நிலையில், தொடர்ந்து துரத்தி அவர்மீது காரை ஏற்றிக் கொலைசெய்திருக்கிறார்கள். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறது.