ஓசூர்: ’இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக ஓசூர் நூரோந்து சாமி மலையில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த கோட்டையூர் ஊராட்சிக்குட்பட்ட நூரோந்து சாமி மலை கிராமம், மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது. இந்த கிராமம், சுமார் 3,600 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனங்களுக்கு மத்தியில் உள்ளது. இந்த மலை கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
மலை அடிவாரத்திலிருந்து கரடுமுரடான மண் சாலை மற்றும் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாக உள்ளது. அதேபோல் தெரு விளக்கு, கழிவு நீர், பொது சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஆதிவாசிகள் போல வாழ்ந்து வருகின்றனர் அப்பகுத் மக்கள்.
அனைத்துக்கும் மேலாக சுதந்திரம் பெற்ற நாள் முதல் தற்போது வரை சாலை வசதியில்லாமல் இப்பகுதியில் மலைவாழ் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இது குறித்து “இந்து தமிழ் திசை” நாளிதழில் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் செய்தி வெளியோனது. இந்த செய்தியின் எதிரொலியால் நேற்றூ மாவட்ட ஆட்சியர் சரயு, நூரோந்து சாமி மலை கிராமத்ததுக்குச் சென்று அப்பகுதியில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் போக்குவரத்து மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதன் பின்னர் அத்தி நத்தம் முதல் நூரோந்து சாமி மலை கிராமம் வரை சுமார் 2 கிலோ மீ்ட்டர் தொலைவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் ஓரடுக்கு ஜல்லி தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து ஆட்சியர் சரயு பணியைத் தொடக்கி வைத்தார். இந்த ஆய்வில் உதவி திட்ட அலுவலர் தேவராஜ், உதவி செயற் பொறியாளர் மாது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சுபாராணி, நூரோந்து சாமி மடத்தின் 13 வது மடாதிபதி சதாசிவம் சாமிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறும்போது, “800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இப்பகுதியில் மக்கள் வசிக்க தொடங்கி உள்ளனர். மன்னர் ஆட்சி மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தனர்.
தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்கு கேட்க அரசியல்வாதிகள் வருவார்கள் ஆனால் எங்களது கோரிக்கையை நிறைவேற்ற யாரும் முன் வந்ததில்லை, அதேபோல் அரசு அதிகாரிகள் பலருக்கு இது போன்ற மலை கிராமம் உள்ளதா எனக் கூடத் தெரியாது.
ஆனால் ’இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வந்த பிறகு முதல்முதலாக மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து எங்களிடம் குறை கேட்டார். பின்னர் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்சியாக உள்ளது. சாலை வசதியால் எங்களது கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும் எனவே ’இந்து தமிழ் திசைக்கு’ கிராம மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்” என்றார்.