சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த லீலாதர் தாக்குர் (22) என்பவர், 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார். இந்த நிலையில், லீலாதர் தாக்குர் அந்தச் சிறுமியுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். ரயில் மூலம் புனேவுக்கு வந்திறங்கிய இருவரும், எங்கு செல்வது என்று தெரியாமல், ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் அனில் பவார் என்பவர், இருவரையும் அழைத்து விசாரித்திருக்கிறார். பின்னர், அவர்களின் நிலையைத் தெரிந்துகொண்டு, இரண்டு பேரையும் தான் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வைத்து, சிறுமியை அனில் பவார் பலமுறை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அனில் பவாரின் கூட்டாளி கமலேஷ் திவாரியும், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
சிறுமியை 6 நாள்கள் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்த அனில், அவரின் காதலனிடமிருந்த 6,000 ரூபாயைப் பிடுங்கிக்கொண்டு, இருவரையும் விரட்டிவிட்டார். அவர்கள் இரண்டு பேரும் சத்தீஸ்கரிலிருந்து தப்பி வந்ததால், அவர்களைத் தேடி சத்தீஸ்கர் போலீஸார் புனேவுக்கு வந்து, இரண்டு பேரையும் மீட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி, ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதையடுத்து சிறுமி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் அனில் பவாரின் கூட்டாளி கமலேஷ் திவாரியைக் கைதுசெய்தனர். அணில் பவார் விஷயமறிந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.