பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படம் டீசர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித், ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுப் பேசினர். இவ்விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரமின் கடின உழைப்பு குறித்து, தங்கலான் படத்தின் மேக்கிங் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.
இதுபற்றி பேசிய அவர், “என்னுடைய முதல் படமான ‘அட்டக்கத்தி’ படத்திலிருந்து ஞானவேல் சாருக்கு என் மீது நம்பிக்கையிருக்கிறது. விக்ரம் சார எனக்கு ரொம்பப் பிடிக்கும். கல்லூரி படிக்கும்போதிலிருந்தே அவரது நடிப்புக்கு நான் பெரிய ரசிகன். ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு அவரை வைத்து இயக்கப் போகிறோம் என்று நினைத்தபோதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
படம் பண்ணுவதற்கு முன் நான் ஆர்ட் போர்டில் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரைவேன். அதை விக்ரம் சாரிடம் காட்டியதும் நான் எப்படி வரைந்தேனோ அப்படியே வந்து படப்பிடிப்பில் நின்றார். கடுமையாக உழைக்கிறார் என்பதையெல்லாம் தாண்டி ஒரு நடிகனாக, தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஒரு மாதத்தில் சண்டைக் காட்சி எடுத்தோம். படப்பிடிப்பு என்று வந்துவிட்டால், நான் சுயநலமானவன். படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பில் அவரை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன்.
இவ்வளவு படங்கள், இவ்வளவு கதாபாத்திரங்கள் நடித்துவிட்டார். அவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கடுமையான உழைப்பைப் போட்டு நடிக்கிறார். கதாபாத்திரங்களை உண்மையாகக் காட்டுவதற்கு அவ்வளவு உழைக்கிறார், கஷ்டங்களை தாங்கிக் கொள்கிறார். அவரது இந்த கமிட்மன்ட் என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது. அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் ‘தங்கலான்’ படம் சிறப்பாக வருவதற்குக் காரணம்.
பார்வதி , மாளவிகா என எல்லாருடைய பெஸ்ட் வொர்க்கையும் இதில் பார்பீங்க. ஒவ்வொரு கலைஞர்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நாங்கள் கடுமையாக உழைத்ததால் மட்டுமே இது நல்ல படம் என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் இந்த படம் உங்களுடன் உரையாடும் என்று நான் நினைக்கிறேன். படம் பிடித்திருந்தால் மக்கள் படத்தின் ஒவ்வொரு காட்சியின் ஆழம் பற்றிப் பேசுவார்கள். பிடிக்கவில்லை என்றால் எதைப்பற்றியும் பேசமாட்டார்கள். மக்களுடன் கனெக்ட் ஆகி என்ஜாய் பண்ணுற மாறி தங்கலான் இருக்கும். VFX காட்சிகளுக்குத் ஒரு தனி பேர் தங்கலானுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்.