விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது. பொதுவான ரசிகர்கள் தவிர்த்து… முழுக்க முழுக்க மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் மன்றத்தினர் பங்கேற்கும் விழாவாக இவ்விழா நடைபெறுகிறது என்கிறார்கள்.
‘லியோ’வின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், இப்போது வெற்றி விழா நடைபெறுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய் பங்கேற்கும் இந்த விழாவில் தயாரிப்பாளர் லலித்குமார், விழாவுக்கு பாதுகாப்புக் கோர காவல்துறைக்கு கடிதம் எழுதினார். காவல்துறையினரும் விழாவிற்கு அனுமதி அளித்தனர். இந்நிலையில்தான் வெற்றி விழாவில் விஜய்யின் மக்கள் இயக்கத்தினரை மட்டும் அனுமதிக்க முடிவெடுத்தனர்.
முன்னதாக தொகுதி வாரியாக உள்ள மக்கள் மன்றத்தினர் அனைவருக்கும் கூகுள் பார்ம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆதார் கார்டு, மொபைல் எண், மன்றத்தில் வகித்து வரும் பொறுப்பு, எத்தனை வருடம் உறுப்பினராக இருக்கிறார்? என்னென்ன பணிகள் செய்திருக்கிறார் என்பது போன்ற கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருக்கிறது. அதன் பின், தமிழகம் முழுவதும் உள்ள மன்றத்தினருக்கு புஸ்ஸி ஆனந்தே வரவழைத்து விழாவிற்கான அழைப்பிதழைக் கொடுத்துள்ளார்.
அதிலும், மக்கள் இயக்கத்தின் திட்டங்களில் பொறுப்பு வகித்துவருபவர்கள் அனைவரையும் வரவழைக்க விஜய் விரும்பினார். விலையில்லா விருந்தகம், முட்டை ரொட்டிப்பால் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், இரத்த தானம், கண் தானம் போன்ற திட்டங்களில் செயல்படுபவர்களுக்கும், மகளிர் அணியினருக்கும் அதிக அழைப்பிதழ்கள் கொடுத்துள்ளனர். இன்று நடக்கும் விழாவில் மக்கள் இயக்கத்தினருக்கு சில உத்தரவுகளை விஜய் பிறப்பிப்பார் என்கிறார்கள். ‘லியோ’வில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் வருகின்றனர்.
விழா நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பேனர்கள் வைக்க அனுமதி கேட்டனர். ஆனால், மொத்தமே 12 பேனர்கள் மட்டுமே வைப்பதற்குஅனுமதி அளித்துள்ளனர் என்கிறார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரின் மத்தியிலும் விஜய் ரேம்ப் வாக் வருவதற்கான திட்டமும் இருக்கிறது என்கிறார்கள்.
இந்த விழாவில் ‘லியோ’ குழுவினர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழகம் முழுவதும் உள்ள மன்றத்தினரின் செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்க விஜய் விரும்பியிருக்கிறார். அதன் வெளிப்பாடே இந்த வெற்றி விழா சாத்தியமாகியிருக்கிறது. ‘லியோ’வில் ‘விக்ரம்’ கமல் வாய்ஸ் இடம்பெற்றதால், விழாவில் உலக நாயகன் கமல் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கேரளாவில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டிருக்கிறார் எனவே அந்த விழா நேரத்தைப் பொறுத்து அவரது பங்கேற்பு இருக்கும் என்கிறார்கள்.