தொழிலதிபரிடம் ரூ.41 லட்சம் மோசடி : நடிகை நமீதாவிடம் விசாரணை

சேலம் : சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி, 45. இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்துகிறார். இவர், நேற்று முன்தினம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

என் நண்பர் மூசா முபராக் வாயிலாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன், 60, என்பவர் பழக்கமானார். அவர் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின், 'ஆல் இந்தியா தலைவர்' எனக் கூறி வந்தார். அவர் பயன்படுத்திய காரில், 'சேர்மன் ஆப் இந்தியா எம்.எஸ்.எம்.இ., நேஷனல் ப்ரோமோஷன் கவுன்சில்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரிடம் பேசியபோது, அந்த அமைப்பின் தமிழக கவுன்சில் சேர்மன் பதவி வாங்கி தருவதாக கூறினார். அதற்கு, 3.50 கோடி ரூபாய் கேட்டார். கடந்த ஜூலை, 10ல், 50 லட்சம் ரூபாயுடன், சேலம், திருவாக்கவுண்டனுார் பைபாஸ் வர அறிவுறுத்தினார்.

அங்கு சென்று, 31 லட்சம் ரூபாயை கொடுத்தேன். முத்துராமன் வாங்கிக் கொண்டு, அவர் அருகே இருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ், 34, என்பவரிடம், பணத்தை கொடுத்தார்.

தொடர்ந்து வங்கி கணக்கில், 19 லட்சம் ரூபாயை, முத்துராமனுக்கு அனுப்பினேன். பணத்தை பெற்ற அவர், பதவியை பெற்றுத் தரவில்லை. கேட்டபோது நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியிடம், 4 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு அவருக்கு பதவியை கொடுத்து விட்டதாக கூறினார்.

என் பணத்தை திரும்ப கேட்டபோது, 9 லட்சத்தை கொடுத்துவிட்டு, மீதி, 41 லட்சத்தை, ஒரு மாதத்தில் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். பணத்தை பெற்றுக் கொடுப்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதுகுறித்து நடிகை நமீதா, அவரது கணவர் சவுத்ரி, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம், சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.