மணிப்பூர் வன்முறை எங்களுக்கு வலியை கொடுத்துள்ளது – பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

அய்சால்,

மிசோரம் மாநிலத்தில் வரும் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பிரசாரம் மேற்கொள்ள மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

கடந்த ஒன்பது ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் அமைதியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், மணிப்பூரில் நடந்த வன்முறையால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம். எந்த பிரச்சினைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.

நான் வட கிழக்கு மாநிலங்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணம் செய்து வருகிறேன். இன்று நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாநிலமும் இன்று விமான சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் உண்மையிலேயே வளர்ச்சியடையாத வரை வலுவான, வளமான, தன்னம்பிக்கையான இந்தியா என்ற கனவு நிறைவேறாது. புதிய ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பொதுமக்கள் விரும்புகிறார்கள். எனவே பாஜகவுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

மணிப்பூரில் உள்ள மெய்தி மற்றும் குகி சமூக மக்களை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உரையாடிய ராஜ்நாத் சிங் பிரச்சினையை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.