மோகன் படத்தில் நடந்த மாற்றம் : குஷ்புவிற்கு பதில் அனுமோல்
ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகனாக இருந்தவர் மோகன். 14 வருடங்களுக்கு பிறகு ஆக்ஷன் வேடத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் 'ஹரா' . இந்த படத்தில் மோகன் ஜோடியாக குஷ்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மோகனும் குஷ்புவுடன் நடிக்கும் கனவு நிறைவேறுவதாக மகிழ்சியுடன் கூறினார். வெள்ளிவிழா நாயகனுடன் இணைவது அரிய வாய்ப்பு என்று குஷ்புவும் சொன்னார். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை, மோகனுடன் குஷ்பு நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு பதில் மலையாள நடிகை அனுமோல் நடித்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய்ஸ்ரீ-ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார்.
இதன் காரணமாக 'ஹரா' படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியபோது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு (குஷ்பு) பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளார். அவரது கதாபாத்திரம் பேசப்படும். படப்பிடிப்பு நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் 'ஹரா' வெளியாகும்”. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
'ஹரா' திரைப்படத்தில் யோகி பாபு, அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கவுஷிக் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். பள்ளி பாடத் திட்டத்தில் சட்ட பாடப்பிரிவை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த படம் தயாராகிறது.