`லியோ’ படத்தின் வெற்றி விழா, ரசிகர்களின் ஆரவாரத்துடன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
இவ்விழாவில் பொதுவான ரசிகர்களில்லாமல் முழுக்க முழுக்க விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அதுவும் ஆதார் கார்டு, மொபைல் எண், மன்றத்தின் உறுப்பினர் கார்டு என மிகுந்த கெடுபிடியுடன் சோதனை செய்த பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் இவ்விழாவில் சினிமா மட்டுமன்றி அரசியல் தொடர்பான பேச்சுகளும் அடிபடும் என்று எதிர்பார்க்கலாம்.
அரங்கத்தின் நடுவிலிருந்து மேடைக்கு விருந்தினர்கள் நடந்து செல்வதற்காக ராம்ப் (Ramp) அமைக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அமர்வதற்கான இருக்கைகளும் அரங்கத்தின் நடுப் பகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் மாஸ் என்ட்ரிக்காக அரங்கைப் பார்த்துப் பார்த்து அமைத்துள்ளனர்.
இது தவிர, ‘தளபதி… தளபதி’ என அரங்கம் அதிர ரசிகர்களின் கரகோஷத்துடன் டி.ஜே கௌதமின் இசை நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து தற்போது சில நிமிடங்களுக்கு முன்னர் ரசிகர்களின் கரகோஷங்கள், விசில் சத்தங்களுக்கு மத்தியில் நடிகர் விஜய் விழா அரங்கத்துக்குள் ரேம்ப் வாக் மூலம் உள்ளே வந்துள்ளார்.
இவ்விழாவில் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான், மரியம் ஜார்ஜ் ‘பிக் பாஸ்’ ஜனனி, மேத்யூ தாமஸ் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தவிர இன்னும் பல பிரபலங்கள் வரவிருக்கின்றனர்.