“மதம், சாதியின் பெயரால் மக்களை பாஜக முட்டாளாக்குகிறது” – கார்கே குற்றச்சாட்டு

சுக்மா(சத்தீஸ்கர்): மதம், சாதியின் பெயரால் மக்களை பாஜக முட்டாளாக்குகிறது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கரில் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அம்மாநிலத்தின் சுக்மா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார். அவரது உரை விவரம்: “காங்கிரஸ் கட்சியை கேலி செய்வதையே பாஜக வழக்கமாகக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக எண்ணற்ற தியாகங்களை செய்திருக்கிறது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகிய தலைவர்கள் நாட்டுக்காக தங்களை தியாகம் செய்திருக்கிறார்கள். பாஜகவில் அதுபோல் யாராவது இருக்கிறார்களா?

பாஜக வாக்கு அரசியல் செய்கிறது. மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களை பாஜக முட்டாளாக்குகிறது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை நாங்கள் குடியரசுத் தலைவராக்கிவிட்டோம் என கூறி பாஜக ஏமாற்றப் பார்க்கிறது. அவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு முதல் பெண் பிரதமரை தந்த கட்சி காங்கிரஸ். நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்த்திய கட்சி காங்கிரஸ்.

நாங்கள் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். அதைவிட முக்கியமாக நாங்கள் இந்த தேசத்தை; ஜனநாயகத்தை; சமூகத்தை காத்து வந்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது என பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. நாட்டில் பள்ளிக்கூடங்கள், வங்கிகள், வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில், அவை அனைத்தையும் வழங்கிய கட்சி காங்கிரஸ். நாங்கள் நாட்டை கட்டியெழுப்பி இருக்கிறோம். பள்ளிக்கூடங்களை, பொதுத் துறை நிறுவனங்களை, வங்கிகளை, தொழிற்சாலைகளை நிறுவியவர்கள் நாங்கள். சத்தீஸ்கரில் மோடி பள்ளிக்கூடம் எதையாவது கட்டியதுண்டா?

நாடு 2014-ல்தான் சுதந்திரம் பெற்றதைப் போல மோடி பேசுகிறார். நாங்கள் நாட்டிற்காக ஏராளமான பணிகளை செய்திருக்கிறோம். அதனால்தான், உரிமையோடு வாக்கு கேட்கிறோம். ஏழைகளுக்கு அதிகாரம் கொடுத்த கட்சி காங்கிரஸ். சமத்துவத்தை ஏற்படுத்திய கட்சி காங்கிரஸ். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டு, அதை மக்களுக்குக் கொடுப்பேன் என வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றவர் நரேந்திர மோடி. ஆனால், அதைச் செய்தாரா? அப்படியானால், அவரை பொய்யர் என கூறினால் அது தவறாகுமா?

ஏழைகள் அதிகாரம் பெற பிரதமர் மோடி விரும்பவில்லை. ஆனால், தான் ஓர் ஏழை என்றும், தான் பிரதமராக இருப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் எப்போதாவது பிரதமர் மோடியைப் போல் பழி சுமத்தி இருக்கிறாரா?” என்று மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.