8 feet high gold pedestal ready for Ram temple in Ayodhya | அயோத்தி ராமர் கோவிலுக்கு 8 அடி உயர தங்க பீடம் தயார்

அயோத்தி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கருவறைக்குள் ராமர் சிலை வைக்க, தங்க முலாம் பூசப்பட்ட, பளிங்கு கற்களால் ஆன, 8 அடி உயர பீடம் நிறுவப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட, 2020 ஆக., 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மூலவர் மண்டபம்

மூன்று தளங்களாக உருவாகி வரும் இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

கோவிலை சுற்றி, 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி வால்மிகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்ளிட்டவை அமைய உள்ளன. மூலவர் கோபுரம், 161 அடி உயரத்தில் கட்டப் பட்டுள்ளது.

கோவிலின் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ல் நடைபெறும் என கட்டுமான குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோவிலின் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலையை நிறுவ, தங்க முலாம் பூசப்பட்ட, பளிங்கு கற்களினால் ஆன 8 அடி உயர பீடம் நிறுவப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர நிர்வாகிகளில் ஒருவரான அனில் மிஸ்ரா கூறியதாவது:

அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் விக்கிரகத்திற்கான பீடம், ராஜஸ்தானில் உள்ள சிற்பக் கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.

மிகுந்த கலைநயத்துடன் கூடிய தங்க முலாம் பூசப்பட்டு, பளிங்கு கற்களால் ஆன இந்த பீடம் 8 அடி உயரமும், 3 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளி ஆபரணங்கள்

இந்த பீடம், அடுத்த மாதம் 15ம் தேதி அயோத்திக்கு வந்தடையும். தற்போது அயோத்தி கோவிலின் தரைதளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில், 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன.

இதேபோல் கோவிலின் வெளிப்புற சுவர் கட்டுமானப் பணி, இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்.

ஏராளமான பக்தர்கள் தங்கம், வெள்ளி ஆபரணங்களை தானமாக அளித்து வருகின்றனர். இவற்றை பாதுகாத்து வைப்பது கடினம் என்பதால், அவற்றை உருக்கி பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.